பக்கம்:சுயம்வரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சுயம்வரம்


நின்றாள் மதனா. அப்போது அவளுக்கு இருந்த கவலையெல்லாம் ஒரே கவலைதான். அதாவது, தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வந்து, தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து, 'என்ன, ஏது?' என்று விசாரிப்பதற்கு முன்னால் பாழும் பஸ் வந்து தொலைய வேண்டுமே என்ற கவலைதான் அது.

அவளுடைய கவலை பஸ்ஸுக்குத் தெரிகிறதா? அது, 'இந்தக் காலைப் பனியில் நனைந்தால் ஜலதோஷம் வந்தாலும் வந்துவிடும்' என்று பயந்தோ என்னவோ, நன்றாக வெயில் ஏறிய பிறகே வந்து சேர்ந்தது. பஸ் வந்து நின்றதும் நிற்காததுமாக இருக்கும்போதே, அவசரம் அவசரமாக அதற்குள் ஏற முயன்றாள் மதனா. கண்டக்டர் அவளைத் தடுத்து, "கையில் என்னம்மா, அது?" என்றான்.

"இருட்டில் எருமை தெரியாவிட்டாலும் பரவாயில்லை; பகலில் பசு கூடவா தெரியாது உமக்கு? பெட்ட்ட்ட்டி!" என்றாள் அவள், ஒரு பாவமும் அறியாத 'ட்'டன்னாவை ஒரே அழுத்தாக அழுத்தி.

"அது தெரிகிறது; பெட்டிக்குள் என்ன இருக்கிறது?" என்றான் அவன்.

அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை: "கள்ளத் தங்கம்! அது சரி, நீர் என்ன, பஸ் கண்டக்டரா? இல்லை, சுங்க இலாகா அதிகாரியா?" என்று சீறினாள்.

அவ்வளவுதான்; அவளை ஏற்றிக் கொள்ளாமலே, போப்பா, ரைட்!" என்ற கண்டக்டர், 'சரியான ராத்திரி கிராக்கி!' என்று தனக்குத் தானே சொல்லி, ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/31&oldid=1384928" இலிருந்து மீள்விக்கப்பட்டது