பக்கம்:சுயம்வரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சுயம்வரம்


'சினிமா என்றால் எனக்குப் பிடிக்காதே, நான் என்ன செய்ய?' என்கிறான் இவன், மாமியைப் பார்ப்பதற்குப் பதிலாக அவளை மறைத்துக்கொண்டிருக்கும் கதவைப் பார்த்து.

'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது, குழந்தை ஆசைப்பட்டுக் கூப்பிடுகிறாள்...'

அவள் முடிக்கவில்லை; 'அதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. மாமி! குழந்தையை சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடாது. சமய சந்தர்ப்பம் தெரியாமல் அது கத்தும்; சுற்றியிருப்பவர்கள் தங்கள் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடுகிறதே என்பதற்காக 'ஸ், ஸ்' என்று சீறுவார்கள். நாம் படம் பார்ப்பதை விட்டுவிட்டுக் குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு போய் சாக்லெட், கீக்லெட் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்ய வேண்டியிருக்கும். ஏன் அந்தத் தொல்லையெல்லாம்? வேண்டாம், மாமி!' என்று கை கழுவப் பார்க்கிறான் இவன்.

அப்போது நீலா இரு கைகளையும் சேர்த்துக் கால் இடுக்கில் வைத்து முறுக்கிக்கொண்டே அம்மாவுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்று, 'அம்மா, அம்மா! அத்தான் ரொம்ப வேடிக்கையாப் பேசறாரு, இல்லேம்மா?" என்கிறாள் தன் உடம்பையும் அஷ்ட கோணலாக வளைத்து.

'ஐயோ, ஐயோ! அம்மாவும் பெண்ணுமாய்ச் சேர்ந்து ஏன்தான் இப்படி வெட்கப்படுகிறார்களோ, தெரியவில்லையே?' என்று தனக்குள் எண்ணிப் பொருமுகிறான் இவன்.

இந்தச் சமயத்தில் நீலா தன் அம்மாவின் காதோடு காதாக ஏதோ சொல்ல, 'அதை என்னிடம் சொன்னால்?... அத்தானிடம் நேரே போய்ச் சொல்லேன்!' என்கிறாள் மாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/41&oldid=1384956" இலிருந்து மீள்விக்கப்பட்டது