பக்கம்:சுயம்வரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சுயம்வரம்


"யாருக்கு யார் எதைச் செய்தால் என்ன? அதில் ஊடுருவி நிற்கும் அன்புதான் முக்கியம்."

"அன்பு, பாட்டிக்குப் பேரன்மேல் இருக்கட்டும்; பேரனுக்குப் பாட்டியின் மேல் இருக்கட்டும்; எனக்கு அது வேண்டாம்!" என்று சொல்லிக்கொண்டே, கால் சட்டைப் பைக்குள் கையை விட்டு, ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்தான் ஆனந்தன். அதை ஒரு பக்கம் கடித்துத் தின்றுவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தான்.

"அடி, சக்கை! காதல் பரீட்சைக்குத் தயாராக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?"

"ஆமாம், ஒரு காதல் மறைந்த பிறகு இன்னொரு காதல் தோன்ற வேண்டியதுதானே?"

"மறைவது எப்படிக் காதலாகும்?"

"அதெல்லாம் ராமாயணக் காலத்துக்காதல் 'ராமா, ராமா' என்று இருந்தாளாம் சீதை; 'சீதா, சீதா' என்று இருந்தானாம் ராமன். 'இந்தக் காலத்துக் காதல் அப்படியா இருக்கிறது? மறைகிறது, தோன்றுகிறது; மறைகிறது, தோன்றுகிறது!"

"அதற்குப் பெயர் காதல் அல்ல, கவர்ச்சி; இனக் கவர்ச்சி!"

"கழுதையை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்"

"காதலுக்குக் 'கழுதை' என்று கூட ஒரு பெயர் உண்டா?"

"உண்டு; முன்னால் அது முட்டாவிட்டாலும் பின்னால் உதைக்குமே!"

"அப்படிப்பட்ட காதலை நீங்கள் ஏன் இன்னும் கட்டிக் கொண்டு அழவேண்டுமாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/51&oldid=1384658" இலிருந்து மீள்விக்கப்பட்டது