பக்கம்:சுயம்வரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சுயம்வரம்


கல்பனா, காதரைன், ஜெயஸ்ரீ, சோபனா, சோனியா, சுபஸ்ரீ, நளினி, நவீனா, ஜெயந்தி, யாஸ்மின், பாத்திமா, ரோஸ், மும்தாஜ், மல்லிகா, மனோரஞ்சிதம், அம்முகுட்டி...

அப்பப்பா! எத்தனை பெண்கள், எத்தனை பெண்கள்!

'காதலுக்கு ஜாதியில்லை, மதமும் இல்லையே' என்று யாரோ ஒரு சினிமாக்கவிஞன் பாடினாலும் பாடினான், இவன் அதை அப்படியே பின்பற்ற ஆரம்பித்துவிட்டானே?

காதலுக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம். ரொம்ப சரி; அதற்காக மனமும் மானமும் கூடவா வேண்டாம்?...

அதிலும், ஒரு சமயம் தன்னை நம்பி வந்த அந்தக் கல்பனாவை ஏதோ ஒரு வெளியூருக்கு அழைத்துக்கொண்டு போய், அவளை அங்கேயே விட்டுவிட்டு, இவன் மட்டும் இங்கே திரும்பி வந்து சொன்ன அந்தப் பொன் மொழிகள்'...

'யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை; எல்லாரும் கடவுளை நம்பித்தான் பிறந்திருக்கிறோம். ஆகவே, என்னை நம்பித்தான் கல்பனா பிறந்திருக்கிறாள் என்று சொல்வதும், அவளை நம்பித்தான் நான் பிறந்திருக்கிறேன் என்று சொல்வதும் சுத்த ஹம்பக்!'...

இந்தப் 'புது மொழி'யை மட்டுமா அவன் அன்று உதிர்த்து வைத்தான்?

'எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகத்தில் மனைவி என்று ஒருத்தி மட்டும் ஏன் ஒருவனுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை!'...

ஆனால் ஒன்று மட்டும் இவனுக்குப் புரிகிறது; அதுதான் ஏமாந்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிப்பது! - இல்லை, வேட்டையாடுவது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/63&oldid=1384692" இலிருந்து மீள்விக்கப்பட்டது