பக்கம்:சுயம்வரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சுயம்வரம்


அதைப் பற்றியும் அவள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை; 'உங்களை நான் காதலிப்பது உண்மை; அதனால் அவர்கள் சொல்வதும் உண்மை' என்று சொல்லி விட்டுச் சிரிக்க வேறு செய்கிறாளே!

சிரிப்பா அது? எனக்கு நெருப்பாகவல்லவா இருக்கிறது!

அந்தக் காலத்தில் பெண்கள்தான் ஆண்களைக் கண்டால் நெருப்பைப்போல் இருக்க வேண்டுமென்று சொல்வார்கள்; இந்தக் காலத்தில் பெண்களைக் கண்டால் ஆண்களல்லவா நெருப்பைப்போல் இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது!

என்னிடம் இருப்பது போல் அவள் எல்லாரிடமும் நீராயிருக்கிறாள் என்றும் சொல்லிவிடுவதற்கில்லை - சிலரிடம் தொட்டவுடன் சுட்டுவிடும் நெருப்பாயிருக்கிறாள்; இன்னும் சிலரிடமோ தொட்டாலும் சுடாத நெருப்பாயிருக்கிறாள்!

இந்த ஆனந்தன், எல்லாரையும் சுற்றிச் சுற்றி வருவது போல அவளையும்தான் சுற்றிச் சுற்றி வருகிறான்; அவனை ஏன் நெருங்க விடவில்லை அவள்?

கிட்டுபவனைக் கண்டால் எட்டி நிற்கிறாள்; கிட்டாதவனைக் கண்டால் ஒட்டி நிற்கிறாள். ஏன் இந்த சுபாவம் அவளுக்கு?

அவனுக்கேற்றாற் போலத்தான் இந்தக் காலத்துப் பத்திரிகைகள். அவற்றில் வரும் கதைகள், கட்டுரைகள், நாவல்கள், ஆடல் பாடல்கள், சினிமாக் காட்சிகள் எல்லாம் இருக்கின்றன!

ஏதாவது ஒரு கோணத்தில் ஆண் - பெண் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதுதானே அவற்றின் இப்போதைய நோக்கமாயிருக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/85&oldid=1384771" இலிருந்து மீள்விக்கப்பட்டது