இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
61
ஈகை
தன்னிடத்தி லேவந்து கேட்போ ருக்குத்
தடையின்றித் தந்திடுவோன்; தலைவி யோடு
அன்றாடம் காண்பானே இரவு இன்பம்;
அதனை விட அதிகரித்த இன்பம் காண்பான்.
✽✽✽
தூங்குவதே சுகமென்று கருதி விட்டால்
சோற்றினை நாம் கனவில்தான் காணக் கூடும்
வாங்குவதே பெருவழக்க மாகி விட்டால்,
மற்றவர்க்கு நாமெவ்வா றுதவக் கூடும்?
✽✽✽
சிரிக்கச் சிரிக்கச் சிலரே பேசுவர்
சேரச் சேரச் சிலரே கொடுப்பர்
✽✽✽
இடிப்பவன் மக்கள் நெஞ்சில்
இடம் பெறான் திருடிப் பாடல்
தொடுப்பவன் என்றோ ஓர்நாள்
தோற்றுப்போய் விடுவான். நாட்டில்
நடிப்பவன் பெருமை கொஞ்ச
நாளைக்கே நிலைத்தி ருக்கும்
கொடுப்பவன் பெயரை இந்தக்
குவலயம் மறப்ப தில்லை
–நூல் : துறைமுகம்