இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
சுரதா கவிதைகள்
மாதமும் ஆண்டும் போல
வாழ்பவள் மனைவி! வீட்டின்
சோதியே அவள்தான்! தக்க
துணைவியும் அவளே யாவாள்.
✽✽✽
அகம்புறம் இரண்டில், காதல்
அதிகாரம் மனைவி ஆவாள்.
பகுபதம் கணவன் என்றால்
பகாபதம் மனைவி! நெஞ்சில்
புகுமுகம் எதுவோ அந்தப்
புதுமுகம் மனைவி! இன்ப
சுகமெனும் நதிக்கு, நல்ல
தோணியும் அவளே யாவாள்.
✽✽✽
நிலவுக்கு மனைவி விண்மீன்
நினைவுக்கு மனைவி எண்ணம்
அலைகடல் நீருக் கெல்லாம்
ஆறுதான் மனைவி.........
✽✽✽
நாடு நலம்பெற வேண்டும் – எனில்
நல்ல தலைவர்கள் வேண்டும்.
வீடு விளங்கிட வேண்டும்–எனில்
வேல்விழி மங்கையர் வேண்டும்.
–இதழ் : சுரதா (15–3–1958)