பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

97


‘வாண்டாண்டா, சாமு. நமக்குப் பாவம் வேண்டாம். அநாவசியமா ஏன் கோபப்பட்டு வார்த்தையக் கொட்டரே? பால் சிந்தியாச்சு. அவ சாமான், துணிமணி எடுத்துண்டு போறதானா போகட்டும்...’

அடிபாவி... !

அடிவயிற்றிலிருந்து சுவாலை பீறிட்டு வருகிறது. பரத் மருண்டு போய் அழுகிறான்.

‘அம்மா..! நீ திரும்பிப் போயிடுவியா?...சாமு, பிள்ளையைப் பற்றி இழுக்கிறான். ‘உள்ளே போ... ராஸ்கல், அம்மா வாம் அம்மா. யாரது அம்மா இங்க? வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத ஒரு ஜன்மம் அம்மாவாம்!...’

‘சாமு நீ பேசாம இரு சித்த, வாயிலிருந்து கீழ விழுந்துடுத்து, எத்தனை நல்ல பண்டமானாலும் திருப்பி எடுத்து முழுங்க முடியறதா? குழந்தைகள் எப்படி அல்லாடிப் போயிடுத்து மல்ஹோத்ரா, பிள்ளைய விட்டு பாவம் நேத்து ஆஸ்பத்திரில எல்லாம் தேடிட்டு வரச் சொன்னான். எங்கிட்ட, ஏண்டீம்மா கடைக்குப் போறேன்னுதானே சொல்விட்டுப் போன? இத, கடைக்குப் போயிருக்கா, வந்துருவ, வந்துருவன்னு பார்த்தா வயத்தில புளிகரைக்கிறது. வரவேயில்ல. குழந்தைகள் வரா, மாயா வரா, கடைவீதி, மார்க்கெட்டெல்லாம் சல்லடை போட்டுத் தேடியாச்சு. என்னன்னு நினைக்க? நான் என்ன செய்வேன்? இவனோ ஊரில் இல்ல. ரோஜாக்கு போன் போட்டு, அவ ஒடி வந்து, இவனுக்கு போன் போட்டு, அடுத்த பிளேனில அடிச்சுப் புடிச்சிண்டு வந்தா என்னத்தைன்னு செய்ய? அன்னிக்குக் காலம யாருக்கோ ஃபோன் பண்ணினாப்பா, காஸுக்கான்னு கூடக் கேட்டேன். பதில் சொல்லலன்னேன். இத்தனை பெரிய டில்லிப் பட்டணத்தில் எங்க போய்த் தேட?’

‘அம்மா, உன்னை வாயிலே துணியடச்சு, குண்டுக் கட்டாக் கட்டிக் காரில வச்சுக் கடத்திட்டுப் போயிட்டாங்ககளா? அப்பிடித்தானேம்மா, அந்த சினிமால கூட வந்தது..?