உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

சுவடி இயல் ய்வு முன்னுரையில் மேற்கோளும் அடிக்குறிப்பும்: சுவடிப் பதிப்பாயினும் நூலைப் பற்றிய ஆய்வு முன்னுரை, ஒரு சிறந்த ஆய்வேட்டின் தன்மையில் விளங்குவதாகும். அம்முன்னுரைக் குரிய அடிக்குறிப்பு, ஆய்வேட்டின் அடிக்குறிப்பு போன்றதாகும்.

மேற்கோள்: அம்முன்னுரையில் எடுத்தாளப் பெறும் மேற் கோள்கள் மிகமிக இன்றியமையாததாக, நூல் கருத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக, முழுமையும் தெளிவுமுடையதாக இருத்தல் வேண்டும். கருத்தை மறுப்பதற்கும் மேற்கோள் அமைய லாம். மூலமொழி மேற்கோள் சிறப்புடையது. பிறமொழி மேற் கோளாயின் மொழிபெயர்த்துத் தரலாம். வேண்டுமாயின் மூலமேற்கோளை அடிக்குறிப்பில் தரலாம். மேற்கோள் தொடர்கள் தனித்து நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கோள் தொடர்கள் மாற்றப்படக் கூடாது. தவறாயிருப்பின் பகர அடைப்புக் குறிக்குள் திருத்திக் காட்டவேண்டும். இரட்டை மேற்கோள் குறிக்குள், வரி அமைப்புக்குச் சிறிது உள்ளே அடங்குமாறு அமைத்தல் வேண்டும். அச்சில் எழுத்துப் புள்ளியை மாற்றி அமைத்துக் காட்டலாம்.

அடிக்குறிப்பு : ஆய்வு முன்னுரையில் அமையும் அடிக்குறிப்பு பெரும்பாலும் மேற்கோளை இடம் சுட்டுவதாகும். மேற்கோள் குறியை அடுத்து வரிக்குச் சிறிது மேலே அமையுமாறு எண் இடுதல் வேண்டும். அந்த எண்ணுக்குரிய மேற்கோளின் இடத்தை அடிக் குறிப்பில் தெளிவாகச் சுட்டவேண்டும். இவ்வாறு இடஞ்சுட்டுவது பதிப்புகளில் நான்கு முறையில் அமைகிறது.

அந்தந்த மேற்கோள் வரிகளின் கீழ் இடத்தைச் சுட்டுவது ஒருமுறை. ஒரு இயலின் முடிவில் அவ்வியலில் காணும் மேற்கோள் களுக்குரிய இடத்தைச் சுட்டுவதும், நூலின் முடிவில் சுட்டுவதும் அடுத்த இரண்டு முறைகளாகும். மேற்கோள் அமையும் அதே பக்கத்தின் இறுதியில் கோடிட்டுப் பிரித்துக் காட்டி இடத்தைச் சுட்டுவது நான்காவது முறை. நான்காவது முறையே நூலைப் படிப்போருக்குத் துணையாக அமையும் எளிய முறையாகும். நூல், ஆசிரியர், வெளியீடு, ஆண்டு முதலான விளக்கங்கள் ஆய்வடங்கலில் அமைவதால், அடிக்குறிப்பில் நூல், பக்க எண் அல்லது பாட்டு எண் ஆகியவை மட்டும் சுருக்கமாக அமைந்தால் போதும். ஒரே தலைப்பில் இருவேறு ஆசிரியரின் நூல்கள் இருக்கு மானால் ஆசிரியர் பெயரும் கொடுப்பது இன்றியமையாததாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/262&oldid=1571346" இலிருந்து மீள்விக்கப்பட்டது