பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கள் --> கர் - சுரம் – கரன் = தேவன் என்பதைச் சான்றாகக் காட்டுவார். குறிஞ்சி மக்கள் முருகனைச் ‘சேயோன்' (சிவந்தவன்) என்றது நெருப்பு வடிவம் பற்றியே. GK. theos, L. deus என்று ஒப்புநோக்கு காட்டிச் செல்வார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி தெய்வம் என்னுஞ் சொல் 'தைவ' என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததென எளிதாய் மூலங்காட்டி விட்டது. திராவிட மொழிகளான மலையாளம் (தெய்வம், தெய்யம்), தெலுங்கு (தேவுடு), கன்னடம் (தேவரு) போன்ற மொழிகளில் இச்சொல் நன்கு வழக்கூன்றியுள்ளது. இச்சொல்லினடியாய்ப் பிறந்த கூட்டுச் சொற்களும் வழக்காற்றிலுள்ளன. தமிழில் பெருவழக்காய்ப் புழங்குமிச் சொல், தன் இன மொழிகளில் பரவலாய்க் காணுமிச்சொல் வடமொழிச் சொல்லான ‘தைவ' என்பதனின்று வந்ததெனக் கூறின் எங்ஙனம் ஒப்பமுடியும். பாவாணர் ஆய்வு நெறியின்படி தமிழ் ஒரு இயன்மொழியாய் இருப்பதால் தமிழில் தான் இவ்வாறாக நுணுகி வேர் காண்பது இயலும். தமிழ் பல வளங்களிலும் தனித்தன்மையுடையது. இத்தனித் தன்மைகளைப் பல சான்றோர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டறிந்தியம்பியுள்ளனர். இவை அனைத்திலும் தனித்தன்மையுடையதாய்த் தேவநேயரின் ஆய்வு திகழ்கின்றது. தம் வாணாள் முழுமையும் மொழித் திறத்தின் முட்டறுக்கும் பெரும் பணியிலீடுபட்டிருந்த மொழிஞாயிறு பாவாணர் தமிழ் திராவிடத்திற்குத் தாயாயிருக்குந் தன்மையையும், ஆரியத்திற்கு மூலமாயிருக்குந் தன்மையையும் விளக்கிக்காட்டி ஞாலமுதன்மொழி தமிழே என நிறுவிச் சென்றார். பழைமைக்குப் பழைமையாய் மட்டுமின்றிப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் பொலிவு செந்தமிழின் தனித் தன்மையாகும். பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு தாக்குதல்களுக்குள்ளான போதிலும் இன்றளவும் இளமை குன்றாமலிருப்பது நந்தமிழின் நனி சிறந்த தனித்தன்மையாகும். ஆகையால் தமிழ்மொழியின் சிறப்புகளை ஆராய்வோர் அதன் இன்றைய நிலையையும் ஆராய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவது தவிர்க்கவியலாததாகும். இன்றைய வழக்கில் பல சொற்கள் மருவி வந்துள்ளன, பல சொற்கள் தம் வடிவுசிதையா மூலத்தோடு வழக்கிலுள்ளன. அவையனைத்தையும் உள்ளடக்கி ஆய்வு செய்வதே பாவாணரின் ஆய்வு நோக்கமாகும்.