பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

செந்தமிழ் பெட்டகம்

தருமாறு பவணந்திமுனிவரை வேண்ட, அவர் அதற் கிணங்கி நன்நூலை இயற்றினார் என்பது, அதன் பாயிர வடிகளால் தெரிகின்றது. இதனால், பவணந்தி யார் ஐந்திலக்கணத்தையுஞ் செய்தார் என்று கொள்வர் சிலர் ஆயின், பவணந்தியார் இயற்றிய எழுத்தையுஞ் சொல்லையும் போற்றிக் கற்றுவந்த தமிழறிஞர் ஏனையவற்றையும் அவர் செய்திருப்பாராயின் அவற்றையும் கற்றுவந்திருப்பர்; இறந்தொழிய விட்டிரார் அவற்றுள் ஒரு சூத்திரமுங் கிடைத்திலாமையின் பவணந்தியார் பொருளிலக்கணம் முதலியவற்றைச் செய்திலர் என்று கொள்வர் சிலர்

பவணந்தி முனிவர் ஊர் சனகை என்று பாயிரங் கூறுகின்றது அவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தில் உள்ளது என்று தொண்டைமண்டல சதகமும், கொங்கு மண்டலத்தில் உள்ளது என்று கொங்கு மண்டல சதகமும் கூறுகின்றன இவற்றுள் இதுதான் அவரூர் என்று துணிதல் அரிதாயுளது

நன்னூலை இயற்றுமாறு வேண்டிய சீயகங்கன் மூன்றாங் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசன் என்று தெரிதலால் அவன் காலம் அக்குலோத்துங்கன் காலமாகிய (1178-1216) பன்னிரண்டாம் நுாற்றாண்டின் பிற்பகுதியும் பதின்மூன்றாம் நுாற்றாண்டின் முற்பகுதியும் ஆகும் ஆகவே பவணந்தி முனிவர் காலமும் அதுவேயாகும் என்று கொள்ளுதல் அமையும்

நன்னூற்குச் சிறந்த உரைகள் இரண்டு உள அவை மயிலைநாதருரையும் சங்கர நமச்சிவாயருரையுமே அவற்றுள் மயிலைநாதர் எழுதிய உரை நூலாசிரியர் கருத்தினை யொட்டியதாயுளது அதில் அகத்தியச் சூத்திரங்கள் என்று சில சூத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன; அவிநய உரையிலிருந்து ஒரு சூத்திரத்தின் உரை எடுத்தெழுதப்பட்டுள்ளது அன்றியும், தொல் காப்பியர் கருத்தினை மறுத்துரைக்கும் வெண்பாக்கள் இரண்டு குறிக்கப்படடுள்ளன. சங்கர நமச்சிவாயர் (தக) எழுதிய உரை விரிவானது