பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

செந்தமிழ் பெட்டகம்

திருத்தக்காரர்களும் ஒருமுகமாகக் கொண்டாடும் நூல் திருக்குறள் ஒன்றே ஆம் மிகப் பழங்காலத்திலேயே இந்த உண்மையைக் கல்லாடர் எடுத்துக்காட்டிப் பாடியுள்ளார்

குறிக்கோள் வாழ்க்கையை வற்புறுத்தி இந்நூல் மிக உயரத்தே பறந்தாலும், அக்கொள்கைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் மலரப் பல செயல்முறைக் குறிப்புக்களைக் கூறிச் செல்வதால் திருக்குறள் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் நூலாக ஒளிர்கின்றது தன்னுயிர்போல் மன்னுயிரை எண்ணுதல்-கொன்றன்ன இன்னா செய்யும் மகனிடத்தும் எல்லாம் தீமையே ஆக முடியாமல் ஒன்றேனும் நன்று இருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, ஆதலால் அந்த நன்றியையே நினைத்துக் கொண்டு இருப்போமானால் அவன் நமக்குச் செய்த தீமையை மறந்துவிடக்கூடும் என்ற வாழ்க்கை நுட்பம், இவைகளை எல்லாம் திருக்குறளில் காண்கிறோம்

இந்த நூலில் முதலிலே கடவுள் வாழ்த்து என்பது ஒன்றும், கடவுள் அருள்நெறி விளக்கமான மழையைப் பேசும் வான்சிறப்பு ஒன்றும், இவற்றை நம்பி, எல்லாவற்றையும் துறந்து, அந்தண்மை கொண்டு ஒழுகும் அறவோரைப் பற்றிப் பேசும் நீத்தார் பெருமை ஒன்றும், அறவோர்க்கே அறம் சிறப்பானாலும் எல்லோர் வாழ் விலும் அது அடிப்படை ஆதலை வற்புறுத்தும் அறன் வலியுறுத்தல் ஒன்றும் ஆக நான்கு அதிகாரங்கள் இந் நூலுக்குப் பாயிரமாக அமைகின்றன

இங்கே நாம் கூறி வந்த பொதுமை சிறப்பாக விளங்குவதைக் காணலாம் "அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை”, “மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத் திறன்” என்று கூறும் பகுதிகள் காண்க இவ்வாறு அடிப்படையாக விளங்கும் இந்தப் பாயிரத்ததினை வள்ளுவர் செய்யவில்லை என்று கூறுவாரும் உண்டு

திருக்குறளில் முதலில் வருவது அறத்துப்பால் இதனை இல்லறம், துறவறம் என்று வள்ளுவர் பகுத்துக்