பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

285

செய்த சித்தாந்த சாஸ்திரங்கள் (இரஹஸ் யங்கள்)18க்கும் மூலமாக இருப்பது; இதில் உள்ள பத்துப்பத்துக்களும், ஆயிரம் திருபாசுரங்களும், இறை வன் உயிர்களை அளிப்பான் எடுத்த பத்து அவதாரங்களையும், அவனுடைய ஆயிரம் திருப்பெயர்களையும் நினைவூட்டுவன:

சித்தர்க்கும், வேதச்சிரம் தெரிந்தோர் கட்கும், செய்தவர்க்கும், சுத்தர்க்கும், தொண்டு செய்யும் பக்தர்க்கும், ஞானப்பகவர்க்கும், பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதமாய், ஆயிர மாமறைக்கும் அலங்காரமாய், அருந்தமிழ்க்குப் பாயிர மாய், நாற்கவிக்கும் படிச்சந்தமாய்ப் பனுவற்கெல்லாம் தாயாய் இரு நால் திசைக்குத் தனிக்தியமாய், படித்தாரை உயிர் உருக்கி, உணர்வுருக்கி, உடலுருக்கி, உடலத்தினுள்ள செயிர் உருக்கொண்ட நம் தீங்கை எல்லாம் உருக்கி, முகில் வண்ண வானத்து மாயப்பிரான் அடியார்கள் குழாங்களோடு உடன்கூட்டிப் பேரின்ப வெள்ளத்து இருக்கச் செய்வது; இதனை மோக்கமாலை’ என்றும், ‘தெய்வக்கவி’ என்றும் பெருமக்கள் கூறுவர்

இறைவன்நிலை, உயிர்நிலை, உயிர் இறைவனை அடைதற்குரிய வழியின்நிலை, அவ்வழியிற் செல்லும் போது உண்டாகும் தடைகளின்நிலை, தடைகளை நீக்கி இறைவனை அடைந்த பின்னர்ப் பெரும் பேற்றின் நிலை என்னும் இவ் வைந்து பொருள்களும் இத்தருவாய் மொழியிற் கூறப்படுகின்றன

உயர்வற, திண்ணன்வீடு, அணைவது, ஒன்றும் தேவும் என்னும் இந்நான்கு திருப்பதிகங்களும் இறைவன் நிலைகளையும் பயிலும் சுடர்ஒளி, ஏந்நாளும் இறையோனும், கண்கள் சிவந்து, கருமாணிக்கம் என்னும் இந்நான்கு திருப்பதிகங்களும் உயிரின் நிலையினையும்; நோற்ற நோன்பு, ஆராவமுதே, மானேய்நோக்கு, பிறந்தவாறும் என்னும் இந்நான்கு திருப்பதிகங்களும் இறைவனை