பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

27

தொகுதிகளையும் திவாகரத்தைப்போலப் பெற்றுப் பூரண நிகண்டாக உள்ளன பல தவிர, இம்மூன்றனையும் தனித் தனியாக மேற்கொண்டு பிறந்த நிகண்டுகளும் உள்ளன இவற்றிற்கு உதாரணமாக முறையே 'நாமதீப நிகண்டு’, ‘அரும்பொருள் விளக்க நிகண்டு’, ‘தொகை நிகண்டு’ என்பனவற்றைக் கூறலாம்

இம்மூன்று வகைகளிலும் ஒருசொல் பல்பொருட் பெயர்த் தொகுதியாகிய பதினோராந் தொகுதிதான் சொற்பொருள் உணர்வுக்கு மிகவும் வேண்டப்படுவது எனவே, சொற்பொருளை விரைவில் கவனத்தில் கொண்டுவரும் வகையில் இத் தொகுதியைச் செப்பஞ் செய்வதில், இதனை விளக்கி வெவ்வேறு அமைப்பில் தனி நிகண்டுகள் யாப்பதிலும் பற்பலர் முயன்றுள்ளனர்

முதலில் பதினோராந் தொகுதியைச் செப்பஞ் செய்யப் புகுந்தவர்களின் முயற்சியை நோக்குவோம் எதுகை நயம்படத் திவாகரர் சூத்திரம் செய்த முறையைக் கைவிட்டு, 11ஆம் தொகுதியை ஆதியிற் பொருள், அந்தத்துப்பொருள் என்று இருவகைப்படுத்தி, ஒவ்வொரு பகுதியிலுமுள்ள சூத்திரங்களை அகராதி வரிசையில் அமைத்துக் கற்க முயன்றனர் இம்முறையைத் திவாகரத்தைப் பதிப்பித்தவர்களும் மேற்கொண்டிருக் கிறார்கள் பொருள் விளக்க எடுத்துக்கொண்ட சொல் ஒரு சூத்திரத்தின் ஆதியில் வருமாயின், அது ஆதியிற் பொருள் எனப்படும்

'அங்கதந் தோணி அரவு மாகும்'

வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும்’


என்ற சூத்திரங்களில் பொருள் விளக்க எடுத்துக் கொண்ட ‘அங்கதம்’, ‘வேளாண்மை’ என்ற சொற்கள் சூத்திர முதலில் அமைந்திருத்தல் காணலாம் இங்ஙனமே, பொருள் கூற மேற்கொண்ட சொல் இறுதியில் அமைத்தால், அது அந்தத்துப்பொருள் எனப்படும்