பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

303

தமிழும், ஐந்தைந்து பாடல்களையுடையதாகக் கலசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழும், மும்மூன்று பாடல்களையுடையதாகப் பழனிப்பிள்ளைத் தமிழும், ஏதுமே வரையறையின்றிப் பருவத்திற்குப் பருவம் பாட்டுக்களின் எண்ணிக்கை மாறுபட்டனவாக ஆண்டாள் பிள்ளைத் தமிழும் இருக்கக் காண்கிறோம் மேலும் பருவம் பத்தே வரையறையாக இருந்தும், பதினொரு பருவம் கொண்டதாக ஆண்டாள் பிள்ளைத் தமிழும் , பன்னிரண்டு பருவங்களைப் பெற்றதாகத், தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழும் அமைந்திருக்கக் காண்கிறோம்

பத்துப் பருவங்களையும் தந்தை, தாய், பாட்டன், பாட்டி போன்றவர்களைச் சிறப்பாகக்கொண்ட சுற்றத்தின் அளவாக வைத்துப் பாடுதல் மரபாகும்

இனி நூலின் போக்கான பத்துப் பருவங்களை நோக்குவோம் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்கும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாயமையும் முதல் ஏழு பருவங்களின் விளக்கத்தைக் காணலாம் அவை முறையே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பனவாகும்

காப்புப் பருவத்துத் திருமால் முதலிய தெய்வங் களைப் பாட்டுடைத் தலைவராகிய குழந்தையைக் காக்க வேண்டுமென்று பாடுவர் திருமாலும், அரனும், பிரமனும், பிள்ளையாரும், முருகனும், கதிரவனும், வடுகனும், எழுவர் மங்கையரும், இந்திரனும், சாத்தனும், குபேரனும், நீலியும், முப்பத்துமூன்று தேவர்களும், திருமகளும், பாமகளும், சந்திரனும் காப்பில் வருதற்குரிய கடவுளாவர் இவ்வரையறையிலும் உடன் பாடில்லா நிலை புலனாகின்றது கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல்களில், காப்புக்குரியவர் அவராக அமையும்பொழுது, அவரை விடுத்து, வேறு கடவுளர்களைக் கூறுவது மரபாயிற்று