பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

173


கூறுவது எளிதன்று. சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும்பாலும் நீதியைப் போதிப்பனவாக அமைந்துள்ளன. எனினும் நீதிக்கதைகள் என்னும் தனிப் பகுதியும் உள்ளது.

விலங்குகளையோ, பறவைகளையோ, வேறு பிராணிகளையோ கதா பாத்திரங்களாகக் கற்பனை செய்து, அவற்றின் வாயிலாக நீதியைப் போதிப்பதை இராமாயணத்திலும் பாரதத்திலும் மற்றப் புராணங்களிலும் காணலாம். பாரதத்தில் கிருத்திரகோமாயு சம்வாதம், நந்தா சரிதம் கபோதாக்கியானம் போன்ற கதைகள் மலிந்து கிடக்கின்றன. பாரத காலத்திற்கு முன்னமே வேதங்களிலும் இத்தகைய நீதிக்கதைகளைக் காண்கிறோம். இருக்கு வேதத்தில் தியூத சூக்தம் முதலிய சூக்தங்களில் நீதி புகட்டப்படுகின்றது. மீன்கள், மாடுகள், மரங்கள் முதலியனவும் பேசிக் கொண்டிருந்தன என்ற கதைகளும் வேதத்தில் காணப்படும். ‘கதை' அல்லது ‘கதானகம்’ என்னும் சமஸ்கிருத நூல்களிற் சில செய்யுள் நடையிலும், சில உரை நடையிலும், சில இரண்டுங் கலந்தனவாகவும் உள்ளன. செய்யுளும் உரை நடையும் கலந்த நூல்களில் பழமை வாய்ந்தது புத்தரின் முற்பிறப்புக் கதைகளைச் சொல்லும், ஆரிய சூரரின் ஜாதக மாலையாகும். இவற்றில் தேவர்,இயக்கர்,கந்தருவர் முதல்,விலங்குகள், பறவைகள் வரை பாத்திரங்களாக இருத்தலைக் காண்கிறோம். இந் நூல்களில் உள்ள கதைகள் மிக்க சுவை உடையனவாய்ப் படிப்போரின் உள்ளத்தைக் கவர்கின்றன.

நீதிக்கதைகள் பொதுவாக இராஜ தந்திரத்தைப் போதிப்பவை. பிற நீதிகளைப் போதிப்பவை என இரண்டு வகைப்படுகிகன்றன. பஞ்ச தந்திரம், இதோப தேசம் போன்ற நூல்கள் இராஜ தந்திரத்தைப் போதிப்பதற்காகவே அமைந்தன. பிருகக் கதை அதன் சருக்கமான மொழி பெயர்ப்பெனக் கருதப்படும் கதாசரித் சாகரம், பிருகத் காதா மஞ்சரி, பிருகத்