புலவர் த. கோவேந்தன்
193
என்று கூறுகின்ற இடத்தும் கலை என்னும் சொல் பல்கலைககளுக்கும் பொதுவாக நிற்றலைக் காணலாம்.
கலைக்களஞ்சியம் அகராதியினின்றும் வேறுபட்டதாகும். ஒரு சொல்லின் பொருள், அதன் வேர்ச்சொல் முதலில் அச்சொல் பற்றி அறிய வேண்டுபவற்றை மட்டுமே அகராதி தரும். கலைக்களஞ்சியம் ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியவற்றைக் கூறும். இதுவரை மனிதன் அறிந்துள்ள அறிவுப் பொருள்களிலும் அழகுப் பொருள்களிலும் சாரமானவற்றைப் பற்றித் தனித்தனியாக அகர வரிசையில் சுருக்கமாகக் கூறும் நூலே கலைக்களஞ்சியமாகும்.
சீனமக்களே கலைக்களஞ்சியம் என்னும் நூல் செய்ய வேண்டும் என்று உலகில் முதன் முதல் எண்ணியவர்கள். ஆனால் அவர்கள் செய்த நூலில் இக்காலத்துக் கலைக் களஞ்சியத்தில் அதற்காக அறிஞர்கள் எழுதும் கட்டுரைகள் காணப்படுவது போல் காணப்படுவதில்லை. அவர்கள் நூல், அதுவரை இயற்றப்பட்டுள்ள நூல்களிலிருந்து அரிய பொருள்களைத் திரட்டித் தொகுத்த தேயாகும்.
இத்தகைய சீன நூல் முதன்முதல் 10ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அதன்பின் 14, 15ஆம் நூற்றாண்டுகளிலும் உண்டாக்கப் பெற்றன. ஆனால் 18ஆம் நூற்றாண்டில் செய்யப் பெற்றதே மிகப் பெரியது; 5026 தொகுதிகள் கொண்டது. அதன் பிரதி ஒன்று 700 தொகுதிகளாகக் கட்டப் பெற்று, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பொருட் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
பொருள்கள் அனைத்தையும் கொண்ட நூல் ஒன்றை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேனாட்டில் முதன் முதலாகக் கூறியவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டிலிருந்தவரும், மேனாட்டு விஞ்ஞானக் கலைக்கு அடிகோலியிவர் என்று கருதப்படுபவருமான அரிஸ்டாட்டில் என்னும் அறிஞர் ஆவர்.