பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

செந்தமிழ் பெட்டகம்


பாரதியாரின் சுதந்திர தாகத்தை வெளியிடுவதற்கு ஒரு புதிய பத்திரிகை தேவை என்பது தெளிவானதும், ஒரு தேசபக்த நண்பரின் உதவியால் 1907 ஏப்ரல் மாத்தில் ‘இந்தியா’ என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். இந்தக் காலத்தில் வ. உ. சிதம்பரனார் பாரதியாரைச் சந்தித்து நெருங்கிய நண்பரானார். ‘மாஜினியின் சபதம்’ என்ற தலைப்பில் அமைந்திருக்கும் பாடல்கள் சிதம் பரனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாரதியார் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவை.

1907 டிசம்பரில் நடைபெற்ற சூரத்துக் காங்கிரசில் திலகரது தீவிரவாதக் கட்சியை ஆதரித்த இளைஞர் கூட்டத்தில் பாரதியாரும் வ.உ. சிதம்பரனாருடன் சேர்ந்தார். சென்னைக்குத் திரும்பியபின் பாரதியாரும் சிதம்பரனாரும் திலகரின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பினர். சிதம்பரனார் மீது ஆங்கில அரசாங்கம் அரசாங்கத் துவேஷ வழக்குத் தொடங்க, அவரைக் கைது செய்து, பாளையங்கோட்டைச் சிறையில் வைத்திருந்த போது, பாரதியார் அந்தச் சிறைக்குப் போய்த் தம் நண்பரைக் கண்டு உரையாடினார். சிதம்பரனாருக்கும் கலெக்டர் விஞ்சு துரைக்கும் இடையே நடந்த உரையாடலாக அமைத்து, ‘நாட்டிலெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை நாட்டினாய்’ என்று தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

தீவிரவாதக் கட்சியை முற்றும் அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமென்று உறுதி கொண்ட ஆங்கில அரசாங்கம், திலகரையும் அரசாங்கத் துவேஷக் குற்றத்திற்காகக் கைது செய்தது. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், திலகருக்கு ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையும் விதித்தது. தேயமெங்கும் கொந்தளிப்பு உண்டாயிற்று. பாரதியார் கேலிச்சித்திரங்கள், சம யோசிதப் பாடல்கள், வீரச்சுவை மிகுந்த கட்டுரைகள், தலையங்கங்கள் ஆகியவற்றின் மூலமாக 'இந்தியா’ பத்திரிகையில் அரசியல் பிரசாரத்தைத் தொடர்ந்து