பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

செந்தமிழ் பெட்டகம்


தார். அவர் பாரதியாருக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார். வேறு நண்பர்களும் அங்கே இவருக்குக் கிடைத்தனர்; சீடர் குழாமும் பெருகியது. மறுபடியும் ‘இந்தியா’ பத்திரிகை புதுவையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. அது பிரிட்டிஷ் - இந்தியாவுக்குள் வரக்கூடாதென்று அரசாங்கம் தடுத்துவிட்டதால், 1910ஆம் ஆண்டில் இந்தப் பத்திரிகை முயற்சிகளும் முடிவுற்றன. இதே ஆண்டில்தான் அரவிந்தகோஷ் புதுவைக்கு வந்தார். அப்பால் பாரதியார், 'பாஞ்சாலி சபதம்' முதலான நூல்களிலேயே தம் முழுக் கவனத்தையும் செலுத்தலானார்.

பாரதியார் புதுச்சேரிவாசி ஆன பின்பு சகுந்தலை என்ற இரண்டாம் புதல்வி கடையத்தில் பிறந்தாள். காளிதாஸரின் சாகுந்தல நாடகத்தில் அச்சமயம் இவர் ஈடுபட்டிருந்ததால் குழந்தைக்குச் சகுந்தலை என்று பெயரிடுமாறு கடிதம் எழுதினார். இப்புதல்வி பிறந்த ஆறு மாதத்திற்கெல்லாம் இவர் மனைவியாரும் புதுச்சேரி வந்து சேர்ந்தார். சகுந்தலைக்காகப் பாடப் பெற்றதுதான் ‘பாப்பாப் பாட்டு’.

புதுவையில் வ.வே.சு. ஐயரும் கடைசியாக வந்து சேர்ந்த பின், அவர்கள் கூட்டுறவால் பாரதியாரின் வாழ்க்கையும் கவிதையும் மேலும் சோபையுற்றன.

அரசாங்க உளவுப் போலிஸ்காரர்கள் பாரதியார் இல்லாத சமயத்தில் அடுத்த வீட்டு வழியாக இவர் வீட்டுக்குள் புகுந்து, கடிதங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் எடுத்துச் சென்றனர். பாரதியாரைத் தந்திரமாகப் புதுவை எல்லைக்கு அப்பால் கொண்டு வந்து கைது செய்யவும் முயற்சிகள் நடந்தன.

இத்தகைய தொல்லைகளுக்கும் வறுமைத் தொல்லைகளுக்கும் இடையே கவிமேதை வளர்ந்த வண்ணமாயிருந்தது. பாரதியாரின் மும்மைப் பெரு நூல்களான ‘கண்ணன் பாட்டு'ம், 'பாஞ்சாலி சபத'மும் ‘குயில் பாட்டு’ம் பிற பாடல்களும் வெளி வந்தன.