பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

217


நோக்கமும் உள்ளவர். இவருடைய இப்பாடல்களில் ததும்பும் சமரச ஞானம் வியக்கத்தக்கது. இத்தகைய பாடல்களில் உலக அறிவியலுக்கும் சமய ஞானத்திற்கும் கூடச் சமரசந்தான். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்ற பெரு நம்பிக்கையுடன் மேன்மேலும் நாட்டுப் பணியும் உலகப் பணியும் புரிவதற்கு ஒர் அடிப்படைத் தூண்டுகோலாக உதவுகிறது சமய உணர்வு இவருக்கு.

‘பரசிவ வெள்ளம்' உபநிடத சாரத்தை வெளியிடும் தமிழ் மந்திர வாக்கியங்கள்போல் அமைக்கப் பெற்றிருக்கிறது.

கண்ணன் பாட்டு :

இருபத்து மூன்று பாடல்கள் அடங்கிய ஒரு தொகுதி. இது முதன் முதல் 1917-ல் வெளிவந்தது. பாரதியார் கண்ணனைத் தாய், தந்தை, அரசன், ஆண்டான், குரு, குலதெய்வம் என்ற நிலைகளில் பாடியிருப்பதுடன் பெரியாழ்வாரைப் போல் குழந்தை நிலையிலும் 'விளையாட்டுப்பிள்ளை’ நிலையிலும் வைத்துப் பாடியிருக்கிறார். சீடன், சேவகன் என்ற நிலைகளிலும் பாடியிருக்கிறார். காதலனாக வைத்துப் பாடியிருப்பதுபோல் காதலியாகவும் கொண்டு பாடுகிறார். கவிதையழகை மாத்திரம் அநுபவித்துவிட்டு இப் பாடல்களின் பண்ணழகை மறந்துவிடக் கூடாது என்று பாரதியாரின் உயிர்த்தோழருள் வ.வே.சு. ஐயர் தனி நூல் வடிவில் வந்த ‘கண்ணன் பாட்டு'த் தொகுப்பிற்குத் தாம் எழுதிய முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்களில் சில இசைத் தமிழ்ப் பூந்துணர்களாகப் போற்றத்தக்கன.

பாஞ்சாலி சபதம் :

இது ஒர் இதிகாசத் துணுக்கு மகாபாரதத்திலிருந்து ஒரு சிறந்த கட்டத்தைத் தேர்ந்தெடுத்து இதிகாசப் பண்புடன் தேச விடுதலையைப் புதைபொருளாகக்