உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

செந்தமிழ் பெட்டகம்


கொண்டு இந்த நூலை இயற்றியிருக்கிறார் பாரதியார். ஐந்து சருக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் “துகிலுரிதற் சருக்க'த்தில் அன்னையின் விடுதலையைச் சுட்டிக் காட்டுகிறார்.

குயில் பாட்டு :

பாஞ்சாலி சபதத்திலும், குயில் பாட்டிலும் பாரதியாரது கவிச்சிற்பத்திறன் நன்கு விளங்குகிறது. இந்த இரண்டையும் தாம் கட்டிய இரண்டு ‘வீடுகள்’ என்று கருதினாராம். ‘குயில் பாட்டு' எல்லா வகைகளிலும் தனிப்பட்டு நிற்கும் காவியமாகும்.

‘குயில் பாட்டே' பாரதியாரின் மிகச் சிறந்த பாட்டு என்று கருதுவோர் உண்டு. 1923-ல் இது வெளிவந்து தமிழிலக்கிய வானில் ஒரு புதிய கிரகம் போலத் தோற்றம் அளித்தது. காதற் கதைதான்; ஆனால், மிருகங்களையும் பறவைகளையும் கதாபாத்திரங்களாகவும், மாய மந்திரத்தையும் மறு பிறவியையும் சாதனமாகவும் கொண்டு கதையை வளரவிட்டிருப்பது பஞ்ச தந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் முதலியவற்றை நினைவூட்டுவதுடன் கவிஞரது கற்பனைப் போக்கிலும் புரட்சிகரமான ஒரு புதுமையைக் காட்டுவதாகும். கற்பனையின் சூழ்ச்சியே ஆனாலும் இக் காதல் நாடகத்தில் குண சித்திர சக்திக்கும் பஞ்சமில்லை; நகைச்சுவை முதலான நவரசங்களுக்கும் குறைவில்லை.

பாரதியார் வசன கவிதையிலும் தமது மேதையை வெளியிட்டிருக்கிறார். “காட்சி”, “சக்தி” என்ற இரு கவிதைகளும் இந்தத் துறையில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை உபநிடதங்களின் இசையை ஒட்டி அமைந்திருக்கின்றன. சின்னஞ்சிறு மணிமொழிகளும் கவர்ச்சிமிக்க சொற்றொடர்களும் பளிச்சுப் பளிச்சென்று சித்தவானில் தோன்றிய கருத்துச் சுடர்களை வாசகர்களுக்கு இனிது புலனாக்குகின்றன. கருத்தின் இசையே இக்கவிதையமைப்பிற்கும் இசையாக