பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

செந்தமிழ் பெட்டகம்


நாடகங்கள் நடிக்கப் பட்ட போதிலும், ஹான் வுர்ட்ஸ் என்னும் கோமாளி நடத்தியவை மிகுந்த ஆபாசமாக இருந்தன. நாய்பர் (1697-1760) என்னும் நடிகைதான் இதை முதன்முதல் எதிர்த்தவர். இவரும் காட்ஷேட் (1700-1766) என்னும் தத்துவ ஆசிரியரும் சேர்ந்து நாடக அரங்கைத் தூய்மை செய்யவும், இன்பியல் நாடகங்களும் துன்பியல் நாடகங்களும் எழுதுவதற்கும் முனைந்தனர். பிரெஞ்சு நாடகத்தைப் பின்பற்றி நாடகங்கள் எழுதவும், நடிக்கவும் ஏற்பாடு செய்தனர்.

வேறு சிலர் ஆங்கில நாடகத்தைப் பின்பற்ற வேண்டும் என்றனர். விதிகளை விட்டுக் கற்பனைக்கே சிறப்புத் தரவேண்டும் என்று கருதினர். இவர்களுள் சிறந்தவர் வீலாண்ட் (1733-1813) என்பவர் 22 ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழி பெயர்த்தார்.

ஜெர்மனி நாடக வரலாற்றில் மிகச் சிறந்த இடம் பெற்றவரான லெஸ்ஸிங் (1729-1781) என்பவர் முதலில் நாய்பர் குழுவைச் சேர்ந்திருந்தார். 1767-இல் முதல் நல்ல பார்ன்ஹெல்ம் மின்னா என்னும் ஜெர்மன் இன்பியல் நாடகத்தை எழுதினார். இவர் நாடகவியல் பற்றி எழுதியது மிகுந்த பயன் உடையது. முதலில் துன்பியல் நாடகம் பற்றிய பிரெஞ்சுக் கருத்துகளை எதிர்த்தார். இரண்டாவதாக ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறப்பை எடுத்தோதினார். மூன்றாவதாக வாழ்க்கையின் சகல அம்சங்களையும் சித்திரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இவருடைய பாத்திரங்கள் உயிருள்ள மக்கள் பேசுவது போலவும் நடிப்பது போலவும் உள்ளன. இக்காலத்து நாடகவியல் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாகக் கூறியவர் என்று.இவரை எல்லா நாட்டு அறிஞர்களும் போற்றுகின்றனர். எதைக் கற்பித்தாரோ அது போல் வாழ்க்கையில் நின்ற பெருமையுடையவர்.

லெஸ்ஸிங் கூறிய சீர்திருத்தங்கள் வேரூன்ற நாளாயின. லெஸ்ஸிங் மறைந்த பின் எழுந்த சிறந்த