பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுதத் தொடங்கி உரை எழுதுவதில் ஒவாப் புகழ் நாட்டித் தமிழுலகில் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தார். ஒளவை அவர்களின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே தமிழ் வளர்ச்சியாக மலர்ந்தன. அவர் ஆற்றிய தமிழ்ப்பணிக்குத் தமிழுலகம் தலை வணங்கியது. என்றோ எப்போதோ ஒளவை எழுதியிருந்த அந்தத் தமிழ்ச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று என் தந்தையார் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள் என்னைத் தூண்டி வந்தார். அப்பணியை நிறைவேற்ற அவர் நினைவுக்கு வந்தவர் இலக்கியமாமணி எழுத்துச்செம்மல் பி.வி.கிரி அவர்களாவார். திரு பி.வி.கிரி அவர்கள் விடாமுயற்சியும், கடின உழைப்பும், செய்வன திருந்தச் செய்யும் திறமும் வாய்ந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழார்வமிக்க தலைசிறந்த எழுத்தாளர். தமிழ்நாட்டரசின் 'தமிழரசு’ இதழில் பணியாற்றி எழுத்துலகில் தனித்திறம் பதித்த மூத்த எழுத்தாளர். இன்று தம் 69ஆம் ஆண்டு அகவை நிரம்பிய நிலையில் 69 நூல்களை எழுதியுள்ளார்.

என் தந்தையார் அவர்கள் தம் எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, அந்தப் பணியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று, என்னை நாடோறும் வலியுறுத்தி, ஒளவை துரைசாமி அவர்களின் கட்டுரைகளைத் தேடித் தொகுப்பது, இலக்கியமாமணியோடு இணைந்து செய்யும் பெரும்பணி என்ற தனியுவகையோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தோம். அரிதின் முயன்று, நூலகங்களுக்கெல்லாம் சென்று பழைய இதழ்களைத் தேடி எடுத்து, படிப்படியாய்க் கட்டுரைகளையெல்லாம் படியெடுத்து வந்து மணிவாசகர் பதிப்பகத்தாரிடம் வழங்கினோம்.

இதுகாறும் நாங்கள் திரட்டிய கட்டுரைகளை முறையாகத் தொகுத்து, அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவதென, திரு.பி.வி.கிரி முடிவு செய்துள்ளார். அதன்படி, 'செம்மொழிப் புதையல்' என்னும் நூல் இன்று வெளிவருகிறது. தாத்தாவின் கட்டுரைகளிலே தனித்தமிழ் நடை, அரிய சொல்லாட்சி இடைமிடைந்த புலமை வீறு, மொழியழகு, சிந்தனை வளம், உரை காணும் திறம் ஒருசேரப் பொலிவதைக் கண்டு மகிழலாம். அறிவு,

12