பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

143


பற்றி, உயிரைப் பற்றிப் பிணைத்துக் கொண்ட அடிமைப் பண்பு நீங்கி விடுமா? வந்தது போல இல்லாவிடினும் ஒளிவர நீங்கும் இருள் போல விரைய நீங்காதன்றோ? உரிமை வாழ்வுபெற்று இயலும் நாம் உள்ளத்தாலும் உரையாலும் செயலாலும் இன்னும் அந்த அடிமைப் பண்பு நீங்காதேயிருக்கின்றோம். அதனால் தூய உரிமைக் கண்கொண்டு எழுதப் பெற்ற திருவள்ளுவரை நாம் அடிமைக் கண்கொண்டு காண்கின்றோம். அதுதான் இப்போது நம்மால் செய்ய முடிகிறது.

இந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் பல பகுதிகள் தெளிவாய் விளங்கவில்லை. பல ஐயங்கள் உண்டாகின்றன. பல புதிய கருத்துகளைப் புகுத்திப் பார்க்கின்றோம். உண்மைக் கருத்துகள் சிலவற்றை உண்மைக்கு மாறாகக் கொள்கின்றோம். இவை யாவும் இயல்பாக உண்டானவை. உரிமை ஞாயிறு தோன்றுங்கால் இத்தகைய கலக்கங்கள் உண்டாவது இயல்பு.

திருவள்ளுவரது திருக்குறள் ஊழ் என்றொரு பகுதியைக் கொண்டுளது. அஃது அறத்துப்பாலின் இறுதியில் பொருட் பாலுக்கு முன்னர் இருக்கிறது. அதனை அங்கே கொணர்ந்து திருவள்ளுவர் வைப்பானேன், என்பது ஒரு கேள்வி. இது நெடுங்காலமாக நின்று நிலவும் பழமையான கேள்வி. திருவள்ளுவர் இதனைக் கூறியிருப்பாரா? ஊழையும் உப்பக்கம் காண்டல் கூடும் என அறிவுறுத்தும் திருவள்ளுவர். "ஊழிற் பெருவலியாவுள" என அதற்கும் பெருமை பேசும் இப்பகுதியைக் கூறுவாரா? என்பன போன்ற சில கேள்விகள் இப்போது புதியனவாய் எழுகின்றன. நெருப்பிற் புகை தோன்றுவது போல நற்சொல் நற்செயல்களில் தீமை தோன்றுவதும், தீச்செயல்களில் நன்மை தோன்றுவதும் இயற்கையெனப் பகவற் கீதையில் வியாசர் கூறுவதுபோல் பழமையில் தீமையும் புதுமையில் நன்மையும் உண்டாகலாமாதலால் இப் புதுக் கேள்விகளால் நன்மையும் விளையும் என்ற உறுதியால் இவற்றை மேற்கொண்டு மதித்து ஆராய்வது அறிஞர்க்குக் கடன். அதுபற்றி இச் சிற்றாராய்ச்சி இங்கே செய்யப்படுகிறது. நல்லறிஞர்கள் ஆராய்ந்து நலங் கொள்வார்களாக.

திருவள்ளுவப் பெருமான் வழங்கிய திருக்குறளின் அடிப்படையான கருத்துகள் யாவையென முதற்கண்