பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. எட்டில் இல்லாத இலக்கியம்

-பழமொழிகள்-


ம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கியங்கள் நிலவுகின்றன. அவை பொருள் செறிந்த சிறு சிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளாகும். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் ஏட்டில் எழுதப்பட்டுக் கற்றவர்களால் பாராட்டப்பட்டும், ! இலக்கிய வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டும், தமிழ்ப் பெரியோர்களால் போற்றப்பெற்றும் வருகின்றன. அவைகளைப் பழமொழி என்பதோடு முதுமொழி என்றும் மூதுரை என்றும் சான்றோர் வழங்குவர்.

‘அப்பனைப்போலப் பிள்ளை’, என்பது நாட்டில் வழங்கும் பழமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியரே தம் தொல்காப்பியத்தில் 'தந்தைய ரொப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்," என்று கற்பியல் சூத்திரம் ஆறில் குறித்துள்ளார். “கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா," என்பதொரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர் “வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு அழியும்நோய் கைம்மிக அணங்காகியதுபோல," (கலி) என்று கூறியிருக்கின்றார். "இறைக்கிற ஊற்றுத்தான் சுரக்கும்," என்பது மற்றொரு முதுமொழி. இதை நம் திருவள்ளுவர் "மறைப்பேன்மன் யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்," என்று தமது திருக்குறளில் அமைத்து வழங்கி யிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியமாகிய இம்முதுமொழிகளை உயர்ந்த மணிகளாகக் கருதி தாங்கள் எழுதிய இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள்.


16-1-49-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது.