பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

செம்மொழிப் புதையல்


அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்றான். திருவள்ளுவரும், ‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன், அடிதழீஇ நிற்கும் உலகு’ என்றார். குடிகளாவார் கற்றாரும் கல்லாரும் என இரு திறப்படுவர். அவருள், கல்லாதவர் கற்றவர் வழி நிற்பவராகையால், அரசியலின் செம்மைக்குக் கற்றறிந்த அறிவுடையோர் பொறுப்புடைய ராயினர். அப்பொறுப்பு, அரசியலில் வேண்டுவன எடுத்தோதற்கு வாய்ப்பளித்தது. சான்றோர் பலரும் பொறுப்புணர்ந்து தமது பேச்சுரிமையை நெகிழ விடாது செய்வன செய்து சிறப்புற்றனர்.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், பாண்டி நாட்டை ஆண்டு வந்த காலத்தில், ஒருகால் நாட்டில் உணவுப் பொருள் விளைவு குறைந்தது. உணவில் வறுமை யுண்டாயிற்று. வேந்தன் துறக்க இன்பம் வேண்டி வேள்வி செய்வதிலும், பெருஞ் செல்வம் ஈட்டிப் பிற வேந்தரோடு போர் செய்வதிலும், வேறே நல்ல புகழ் பெறக் கருதி அதற்குரிய செயல்களிலும் பெரிதும் ஈடுபட்டிருந்தான். உணவு முட்டுப்பாட்டைச் சிறிதும் உணராது, அதனை எடுத்தோதுபவர்களை இகழ்ந்து நின்றான். உணவுப் பொருளை மிகுதிப் படுத்துவது குறித்து வேந்தன் கருத்துச் செலுத்தா திருப்பதைக் குடபுலவியனார் என்னும் சான்றோர் கண்டார். அவரோர் அறிவுடைய சான்றோர் என்பதும், அவர்க்கு அரசியலில் பொறுப்புண் டென்பதும் வேந்தன் முதலாயினார்க்குத் தெரியும். அவர் வந்து வேந்தனைக் கண்டபோது, வேந்தன் அவர் சொல்வது கேட்க இசைந்திருந்தான். அவர்,

மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே.
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே