பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

செம்மொழிப் புதையல்



பின்னர் அத்தாய்ப்புள், தன்மனத்துப் பலவேறுவகைப்பட்ட எண்ணங்கள் படர்ந்தெழுந் தடங்க, வெய்துயிர்த்து, வேறு கூறா தொழிய, மற்றொரு சிறுகுருகு கூறும். அது, ‘இறுத்த இருள் கெட, யாண்டும் இளங்காலும், இன்னொலியும் எழ, பொன்னுருக்கென்ன இளவெயில் பரப்பி, விடியலிற் கீழ்க்கடலின் முகட்டெழும் இளஞாயிற்றினைக் காணாய்! தெண்ணிரின் திரையிடை, அச்செஞ்ஞாயிற்றின் செங்கதிர்கள் தவழ்தலும், ஆண்டுப் பல் வண்ணங்கள் தோன்றி மிளிர்தல் காணாய்! வரிக்கெண்டையும் பருவராலும் நண்பகலொளியில் மின்செய்து மறைதலும், இளந்தளிர்கள் ஒளிதெறித்தலும் பிறவும் காணாய்! தண்டென்றல் தளிரசைப்ப, பார்ப்புக்கள் கிளைபடர்ந்து இசைபாட, புதுமலரின் மணம் பரவ, காலையணிந்து பகலெல்லாம் ஒளியின்றியிருந்த கவினனைத்தும், மாலையிற்றுவர முடித்துத் தோன்றும் இயலணங்கின் எழிற் செவ்வியை மறத்தலும் கூடுமா? ஈண்டாயினும், ஆண்டாயினும், யாண்டாயினும் அமர்க. வெண்மதியின் தண்கதிர்கள் பைந் தழைகளின்மீது பரவி, கலித்தோடும் அருவிநீரில் ஆடல் பயின்று, பூங்காவை வானமாக்கி, கான்யாற்றை, அத்திங்கட் புத்தே ளுர்ந்து செல்லுந் தேர்வழியாக்க, விளங்கும் இரவுப் பொலிவை நினைத்தொறும் நெஞ்சம் வேறோரிடத்தையும் நினைக்குங் கொல் திண்கலமும் சிறுநாவாயும் செல்வுழிச்செல்வுழி யெழும் ஒய்யெனும் ஓசை நம் உறக்கம் கெடுப்ப, நெடுந்தருவின் பைங்கிளை படர்ந்து பாடலை நம் இனம் பயில, இன்பக்காட்சியே யாண்டும் இலங்கும் இந் நிலத்தினும் அவ் அறியாநிலம் அழகுடைத்தோ?

"துஞ்சுவது போல இருளி, விண்பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்(டு)
ஏறுவது போலப் பாடுசிறந்(து) உரைஇ
நிலநெஞ்(சு) உட்க ஒவாது சிலைத்தாங்(கு)
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்.”

நாம் நம் படையமை சேக்கையைப் படர்ந்து, ஒன்றோடொன்று புல்லி இருக்கின் கார்செய்பணிப்பும் கலங்குதுயர் செய்யாதாக, எழுந்த வெம்மையால் இன்பம் மிகும் இவ்விரும் பொழிலினும், நீ கூறும் அப்பூம் பொழில் ஏற்றமுடைத்தாமோ?