பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

செயலும் செயல் திறனும்


வினைகளையே, அவை எவ்வளவு துன்பம் தரவல்லனவாக இருப்பினும், எத்துணைப் பொருளிழப்புக்கு நம்மை ஆளாக்கினும், அவற்றையே மிகுந்து பாராட்டி ஏற்றுக்கொண்டு செய்தல் வேண்டும். இதைத் திருவள்ளுவர் மிகுந்த அழுத்தமாக இப்படிக் கூறுகிறார்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

(538)

புகழத்தக்க செயல்களைப் போற்றி அல்லது மதித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு போற்றாமல் அவற்றைப் பொருள் வருவாய் கருதி இகழ்ந்து, செய்யாமல் விட்டவர்களுக்கு எப்பொழுதும் உய்வில்லை என்பது இதன் பொருள். புகழத்தக்கவற்றைத் தவிர்த்தால் இகழத் தக்கவற்றைத் தாம் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய செயல்களால் தொடக்கத்தில் பெரும் பொருள் வருவதானாலும், அப்பொருள் நல்ல பயன்களையும் தராது. இறுதியில் பேரழிவுக்கு உட்படுத்தி, நமக்கும் பல்வேறு இடர்களை உண்டாக்கிக் கொடுக்கும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் தெளிவான கருத்து. எனவே, இதனை இன்னொரு குறளிலும் வலியுறுத்துவார்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை

(652)

இக்குறள் வரும் வினைத்துசய்மை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்துக் குறள்களிலும், அப்பேரறிஞர் அந்தக் கருத்துகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்வார். 'நலம் தரும் வினைகள், துணையும் நல்கும். ஆக்கமும் தரும்' என்பார் (651) 'தம் ஒளி (புகழ்) கெடுக்கின்ற செயல்களை ஒருவர் தவிர்தல் வேண்டும்' (653) என்பார். 'துன்பப் படினும் நல்ல அறிவுடையவர் இழிவான வினைகளைச் செய்யமாட்டார்கள். தன் தாய் பசித்திருக்கக் கண்டாலும், பெரியோர்கள் - நல்லவர்கள் - பழிக்கும் செயலை ஒருவன் செய்யக்கூடாது' (656) 'பழிக்கத்தக்க செயல்களைச் செய்து அதனால் வரும் வருவாயைவிட நல்லவர்களுக்கு வறுமையே நல்லது' (657) என்றெல்லாம் சொல்வார்.

3. பழியான செயல்களைச் செய்யாமை

இனி, அவ்வாறு பிறர் பழிக்கின்ற செயல்களைப் பொருளுக்காக ஒருவன் செய்ய வேண்டுமானால் அவன் பொய் சொல்லுதல் வேண்டும். ஏமாற்றுதல் வேண்டும். திருடுதல் வேண்டும். அல்லது கொள்ளை, கொலை செய்தல் வேண்டும். இல்லெனில் பிறரை நம்ப வைத்து அவர்கள் அறிவையும் மனத்தையாகிலும் மயக்குதல் வேண்டும். அதுவும் இல்லெனில் மக்களின் உடல், உள்ளக் கீழ்மை உணர்வுகளையாவது து.ாண்டுதல் வேண்டும் மொத்தத்தில் இவன் பொருள் பெறுவதற்கு மற்றவர்களுடைய உள்ளத்தின் அல்லது உடலின் அல்லது அறிவின் அல்லது உடைமையின் நலன்களைக் கவர்தல் அல்லது மயக்குதல் வேண்டும். அப்படிப்பட்ட நிலையினில் தம் அறிவு, உள்ளம், உடல்