பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. தன் வலிமை அறிதல்

1. அறியாமை

வலியறிதல் அதிகாரத்துள் திருவள்ளுவர் வினைவலியை அடுத்து, வினைசெய்யப் புகுவான் ஒருவன் அறிந்து கொள்ள வேண்டுவதாகக் குறிப்பிடுவது தன் வலிமையை அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் அறிவையே மிகப்பலருக்குத் தன் வலிமை தெரியாது. கொஞ்சம் படித்தவனும் தனக்கு நிறையத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்பான். பிறரை விடத் தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைக்கும் அறியாமையே தலையாய அறியாமையாகும். இஃது, இந்தக் காற்றை நான் மட்டுந்தான் நுகர்கிறேன், இந்த வெயில் என்மேல் மட்டுந்தான் அடிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணத்தை நான் மட்டுந்தான் எண்ணமுடியும் என்று நினைப்பது போன்ற அறியாமையாகும். உலகில் படைக்கப்பெற்றுள்ள உயிர்கள் குறிப்பாக மாந்த உயிர்கள் அனைத்துக்கும் அறிவு, மன உணர்வு, இன்பதுன்ப நுகர்ச்சிகள் முதலிய அனைத்தும் பொதுவே. இயற்கை எல்லோருக்கும் தாயும் தந்தையும் இறைமையும் ஆகும். இந்நிலையில், நமக்கு மட்டுமே அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது. இந்த உணர்வே அறிவின் தொடக்க உணர்வாகும். எனவே, நமக்கு எல்லாம் தெரியும் என்றோ, நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்றோ நினைக்கக் கூடாது. எல்லாவற்றிலும், நம்மைவிட வல்லவர்களும் இருக்கின்றார்கள். நல்லவர்களும் இருக்கின்றார்கள். இனி, அதற்காக நாம்தாம் எல்லோருக்கும் தாழ்ச்சி என்று நினைத்து விடவும் கூடாது. நம்மை விட வல்லவர்கள் எப்படி உண்டோ, அப்படியே நம்மை விட வல்லமை குறைந்தவர்கள் அல்லது நல்ல தன்மை குறைந்தவர்களும் உலகில் உளர். இப்படித்தான் ஒவ்வொருவரின் நிலையும். நாம் படித்த படிப்புக்கு அல்லது கற்ற கல்விக்குக் கீழே படித்தவர்களும் உண்டு. மிக மிக மேலாகப் படித்தவர்களும் உண்டு. இந்த ஏற்றத்தாழ்வு அவரவர்கள் முயற்சியால் வருவது. தொடக்கத்தில் எல்லோரும் ஒரு நிலையில்தான் இருந்தோம். பலர் பலபடியான சூழல்களால், முயற்சிகளால் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். பலர் நல்ல சூழல் வாய்க்காமையாலும் முயற்சியின்மையாலும் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். எனவே, இதன் தொடக்கம், வேறுபாடு முடிவு இவை பற்றியெல்லாம் நாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிராமல், நம் அறிவு, முயற்சி,