பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

51



இங்கு அறியாமை என்பதே முதலில் அறியத் தக்கது என்று மட்டும் தெளிவாக அறிந்து கொள்வது மட்டும் போதுவதாகும் அறியாமையைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் அறிவுக்கே ஊக்கம் பிறக்கும். அறிவு முனைப்பு தோன்றும். அதன் பின்னரே அறிவு இயக்கம் தொடங்குகிறது. அறிந்து கொண்டதைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவனுக்கு அறிவு இயக்கம் இல்லை. நமக்குத் தெரிந்தது பற்றி எண்ணியவுடன், அறிவு அங்கேயே அமர்ந்து கொள்கிறது. நாம் நிற்கின்ற இடந்தான் நாம் தேடிப் போக வேண்டிய இடம் என்று நாம் தெரிந்தவுடன், நாம் ஏன் மேலே போகின்றோம்? அங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம். அதன் பின்னர் நாம் வேறோர் இடம் போக வேண்டியிருந்தால்தான் நாம் எழுந்து நடக்கத் தொடங்குவோம். அதுபோல் அறிவு, அறிவை அறிவதற்குப் பயன்படக் கூடாது. அங்கு அதற்கு வேலையில்லை. ஒளியுள்ள இடத்தில் விளக்குக்கு என்ன வேலை? என்ன தேவை? இருள் உள்ள இடத்தில்தான் அது பயன்பட வேண்டும். பயன்படும். அப்பொழுதுதான் அங்குள்ள இருளைப் போக்குதற்கு நாம் வைத்திருக்கும் விளக்கின் ஒளி போதுமா, போதாதா என்று தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொண்டால்தான், ஒரு வேளை ஏற்கனவே உள்ள விளக்கின் ஒளி போதாத விடத்து, வேறு ஒளி மிகுந்த விளக்கைத் தேடலாம். அல்லது அதனைச் செய்யத் தொடங்கலாம். உலகில் இதுவரை தோன்றிய அறிவுழைப்பாளரெல்லாரும் தம்தம் அறியாமையைக் கண்டு அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வெற்றி கண்டவர்களே ஆவர்.

3. மூன்று வகைத் தொழிலறிவு

எனவே, ஒரு வினையைத் தெரிந்து கொண்டோம் என்பது, அது பற்றிய அனைத்து அறியாமைகளையும் போக்கிக் கொண்ட ஒரு நிலையே ஆகும். ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்குள் ஒரு நாளோ இரு நாட்களோ நுழைந்து விட்டு வெளிவந்தவுடன், அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு நமக்கு வந்துவிடாது. அறிவு மூவகைப்பட்டது. தொழிலறிவு. தொழில் செய்யறிவு, தொழில் திருத்த அறிவு என்பன அவை. ஒரு தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்வது தொழிலறிவு (Theory) ஆகும். அத்தொழிலை நன்கு திறம்படச் செய்வது தொழில் செய்யறிவு (Practical) ஆகும். அத்தொழில் செய்கின்றபொழுது நம் வகையாலோ கருவிகள் வகையாலோ ஏற்படுகின்ற இடைத் தவறுகளைத் திருத்தி, ஒக்கிட்டு (Repair) மேலும் அத்தொழிலைச் சரிவர இயங்கும்படி கட்டமைத்தல் பற்றிய அறிவு (Mechanical) தொழில் திருத்த அறிவாகும். இம்மூன்று வகையான தொழிற் கூறுகளும் படிப்படியாக வளர்ச்சி பெறுவனவாகும். எனவே, ஒரு வினை, அல்லது தொழில், அல்லது செயல் பற்றிய அறிவு பெறுவது, வினை செயப் புகுவான் ஒருவன்