பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

79



நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒருவரை யொருவர் துணையாக்கிக் கொள்ள விரும்பும் இருவர் பல்வேறு கூறுகளில் வேறு வேறு தன்மைகள் கொண்டவராக இருக்கலாம். அவற்றுள், பெரும்பான்மையும், ஒருவர்க்கொருவர் பொருந்திவரக் கூடிய கூறுகளைக் கொண்டவராக ஒருவர் இருக்கின்றாரா என்று, மற்றவர் ஆய்ந்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பெரும்பாலும், மாந்தராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும், இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு தன்மைகள் இருக்கும். இவற்றுள் இயற்கைக் கூறுகள் எவை, செயற்கைக் கூறுகள் எவை என்பனவற்றை வேறு பிரித்து அறிவது ஒருவாறு கடினமானதே. இன்னும் சொன்னால் சில கூறுகளை அறிவது மிகவும் கடினமாகவே இருக்கும். சில அறிந்து கொள்ள இயலாத கூறுகளாக இருக்கும். எனவே, நாம் ஒருவர் துணையை எவ்வகையில் எதன் பொருட்டு நாட விரும்புகிறோம் என்பதை, முதலில் நன்றாக எண்ணி முடிவு செய்தல் வேண்டும். அவ்வகையில் நமக்கு அவர் துணை பொருந்தி வருமா என்பதை அறிவுவழி ஆய்ந்தறிதல் வேண்டும். இந்நிலைகளை எல்லாரும் அறிந்திருப்பது மிகவும் கடினமாதலால், இவற்றைக் கொஞ்சம் விரிவு படவே கூறுவோம்.

11. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும்

மக்களுக்கு இருக்கும் இயற்கைக் கூறுகளை ஒருங்கே தொகுத்துக் கூறுதல் மிகவும் கடினம். ஆனால் அவற்றை ஒருவாறு கீழ்வருமாறு எடுத்துக் கூறலாம்.

அன்பு, பண்பு, அவா, குணம் அறிவு நாட்டம் முதலிய உணர்வுகள் பிறவி வழி உயிரியக்கத்துடன் ஒன்றிய இயற்கைக் கூறுகளாகும்.

அறிவிடுபாடு பழக்க வழக்கம், மொழியுணர்வு, இனவுணர்வு, நாட்டுணர்வு, உணவு, உடை, நாகரிகம் முதலியன சார்பு வழி அமையும் செயற்கைக் கூறுகளாகும்.

ஒருவரிடம் அமைந்த இயற்கை உணர்வுக் கூறுகளைப் பெரும்பாலும் மாற்றவே இயலாது. செயற்கை உணர்வுக் கூறுகளை நெருங்கிப் பழகுவதன் வழியாலும், அறிவுத் தாக்கத்தாலும் படிப்படியாக மாற்றியமைத்து விடலாம்.

நல்ல ஒழுகலாறுகள் பெரியோர்களிடம் பழகுவதால் நமக்கும், படிந்து சிறக்கும். சிறியோர்களிடம் பழகுவதால் அவை தவிர்ந்து அழியும். எனவேதான் உலகின் உயர்ந்த மெய்ப்பொருள் நூலாகிய திருக்குறளில்,