பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
81
 


நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் (959)

எனவே மனத்தின் உணர்வுகளெல்லாம் இயற்கை உணர்வுகளாகும். அவை மாற்ற முடியாத உயிரொடு தொடர்புற்ற உணர்வுகள். அந்த மனம் சார்ந்த உடல் இவ்வுலகில் எவ்விடத்து வந்து பிறக்கின்றதோ, அவ்விடத்துச் சூழல்களை அளாவி அமையும் உணர்வுகள் செயற்கை உணர்வுகளாகும். இவற்றை நாம் நம் வலிந்த முயற்சிகளால் மாற்றிக் கொள்ள இயலும் என்பது அறிவு நூலார் கொள்கை. எனவே, அறிவீடுபாடு செயற்கையுணர்வு ஆகும். அவ்வறிவிடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் தமிழ்ச் சான்றோர் பொருள் என்னும் பாகுபாட்டில் அடக்குவர். மனவீடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் அறம் என்றும் பாகுபாட்டில் அடக்குவர். இவ்விரு உணர்வுகளே தமிழ்நூல்களில் புறம் என்றும் அகம் என்றும் குறிப்பிடப்பெறுகின்றன.

12. சில மனவியல் நுட்பங்கள்

இவ்வுணர்வுநிலை நுட்பங்களையெல்லாம் விளக்கிச் சொல்வதானால் அஃது ஒரு பெருநூலாகவே விரியும். ஆகலின் அதனை இத்துடன் நிறுத்திக் கொண்டு, வினைக்குத் துணைவரத் தக்கவரைப் பற்றி மேலும் சிறிது விளக்கி மேலே சொல்லுவோம்.

ஒருவர்பால் அமைந்துகிடக்கும், மாற்றலாகாத இயற்கை உணர்வுகளைக் கொண்டே, ஒருவரை எடையிட்டுத் தேர்ந்து, அவர் ஏதோ சில வகையில் நமக்குப் பொருந்தியவராயின், அவருடன் தொடர்பு கொள்ளவும், பொருந்தாதவராயின் அவருடன் தொடர்பு தவிர்க்கவும் வேண்டும். ஒரு வகையில் மட்டும் இச்செயல் நிகழும் என்று சொல்ல முடியாது. இருவகையிலுமே இச் செயல் நிகழலாம். நாம் ஒருவரின் தொடர்பு நமக்குக் கூடாது என்று நினைக்கும் அதே நேரத்தில், அவரும் நம்முடைய தொடர்பைக் கூடாது என்று ஒதுக்கலாம். இதனால் நாம் வருந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. நிலை எளிதானது என்று எண்ணி, மனம் நிறைவுறுதல் வேண்டும்.

இயற்கை உணர்வுகளால் வேறுபடாமல், நாம்துணையாகக் கொள்ள விரும்பும் ஒருவர், நமக்கு, செயற்கை உணர்வுகளால் மட்டும் வேறுபட்டிருப்பாராயின், நாம் அவரைத் தவிர்க்கத் தேவையில்லை. அத்தகைய உணர்வுகள் என்றும் மாற்றிக் கொள்ளத் தக்கனவே ஆகும். ஆனால், அதற்காகச் சில முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவே! அம் முயற்சிகள் நம் வினை முயற்சிகளுள் அடங்கிவிடும். எனவே, அவற்றுக்காக நாம் சலிப்படைய வேண்டுவதில்லை. எப்படியோ ஒரு வினைக்குத் துணையாக, முழு நிறைவாக, நாம் எதிர்பார்க்கும்