பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சேக்கிழார்

உண்மையாகும். இக்களப்பிரர் காலத்தில், பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்த பாண்டியனால் விடப்பட்ட பிரம்மதேய உரிமை அழிக்கப்பட்டு விட்டது என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தால் அறியலாம். மேலும், இக்களப்பிரர் ஆட்சியிற்றான் சமண சங்கம் பாண்டிய நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. எனவே, பாண்டி நாடாண்ட களப்பிரர் சைவ விரோதிகள் - வைதிக விரோதிகள் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாகும். விளக்கமாகவே, மூர்த்தியார் சிவப்பணி செய்யாவாறு களப்பிர அரசன் இடையூறு விளைத்தான் என்று சேக்கிழார் கூறுதல் வரலாற்றுச் செய்திக்குப் பொருத்தமான தாகவே காணப்படல் காண்க. மூர்த்தியார் . காலம் அச்சுத விக்கந்தன் காலமான (ஏறத்தாழ) கி.பி. 450 என்னலாம்.


கோச்செங்கட் சோழன், இவன் பொய்கையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்றவன் அப்பர். சம்பந்தர், சுந்தரரால் ஏத்தெடுக்கப் பெற்றவன். பிறகு திருமங்கையாழ்வாராற் பலபடப் பாராட்டப்பெற்றவன். இவன் சோழராட்சிக்கு உட்பட்ட தொண்டை நாட்டையும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட சோணாட்டையும் வென்ற பெருவீரன் என்று சொல்லாம். இவன் குடகொங்கர், சேரர் முதலியோரையும் வென்றவன். இப்பேரரசன், பல்லவராலும் களப்பிரராலும் சைவ சமய ஆதரவு குறைந்து வருதலைக் கண்டு, எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோவில்களைத் தமிழ் நாட்டிற் கட்டுவித்த பெரும் பக்தன் தில்லையைச் சிறப்புடைய சிவத்தலமாக அமைத்த சிறப்புடையான் தில்லைவாழ் அந்தணர்க்கு மாடங்கள் பல சமைத்தவன். இவன், வரலாற்றில் இடம் பெற்ற சோழ வேந்தன். இவனைப்பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமையாகப் பேசுகின்றன. சோழர் காலத்து நூல்கள்