பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114சேக்கிழார்


முனையரையா இக்கல்வெட்டிற் குறிக்கப்பட்ட முனைப்பேரையர் ஆகலாம் என்று கோடல் பொருத்தமானது.

முனையதரையர். 1. “பல்லவப் பேரரசின் அழிவுக் காலத்தில் ‘முனையதரையன் அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார்’ என்று ஒருவன் இருந்தான்” என்று திருவாரூர்க் கல்வெட்டு குறிக்கிறது.

2. வீர ராசேந்திரன் ஆட்சியில் ‘வீர ராசேந்திர முனையதரையன்’ என்பவன் இருந்தான். -

3. விக்கிரமசோழன் ஆட்சியில், ‘முனையதரையன் ஒருவன் அமைச்சனாகவும் சேனைத்தலைவனாகவும் இருந்தான்’ என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது இங்ங்னம் மும்முனையதரையர் மரபினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவருள் ஒருவரே சுந்தரரை வளர்த்தவரும் 63 நாயனமாருள் ஒருவருமாகிய நரசிங்க முனையரையர் என்பவர். அவரைப் பற்றிய பல குறிப்புகளைச் சேக்கிழார் மேற்சொன்ன இறுதி முனையரையன் பால் கேட்டறிந்திருக்கலாம் பொறுப்புள்ள அம்மரபினரைக் கேட்டு அந்நாயனார் புராணம் பாடுதலே சிறப்புடைத்தன்றோ?

திருவாரூர்க் கல்வெட்டு. (1) “சுந்தரர் தாயாரான இசைஞானியார்திருவாரூரிற் பிறந்தவர் இசைஞானியார், திருவாரூர் – ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன் இசைஞானியார். சடையனார். சுந்தரர் என்ற மூவர் படிமங்களையும் ஆரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான்.” என்பது சேக்கிழார் காலத்துத் திருவாரூர்க் கல்வெட்டுச் செய்தியாகும். இக்குறிப்பை நோக்க, சுந்தரர் பிறந்த சிவாசாரியர் மரபினர் சேக்கிழார் காலத்தில் திருவாரூரில் இருந்தனர் என்பதை நம்பலாம். சேக்கிழார்