பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 சேக்கிழார்

மநுச் சோழன் வரலாறு. பெரிய புராணம் - நகரச் சிறப்பில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மநுச்சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது. 'மநுச்சோழன்,'தன் மகனது தேர்க் காலில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக, அத்தனி மகனையே தேர்க்காலில் இட்டுக்கொன்றான்' என்பது கதைச் சுருக்கம். இந்தச் சுருக்கமே அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட சிலப்பதிகாரத்துள் முதன்முதலாகக் கூறப்பட்டுள்ளது இவ்வரலாறு பிற்பட்ட நூற்றாண்டுகளில் எழுந்த திருமுறைகளிற் குறிக்கப்பட வில்லை. வேறு நூல்களிலும் சிறப்பாகக் காணப்படவில்லை. இவ்வரலாற்றின் முழு நிகழ்ச்சிகளை அரிய இலக்கியச் சான்றில்லை. இங்ஙனம் இருப்பச் சேக்கிழார் இவ்வரலாறு சம்பந்தமான பல விவரங்களைத் தெளிவுற முதன்முறையாகத் தந்துள்ளார் அவை (1) அாசன். இறந்த கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொல்லும்படி அமைச்சனை ஏவுதல், (2) அவன் அதனை செய்ய இசையாது தற்கொலை செய்துகொள்ளல். (3) அரசனே தன் மகனைக் கொன்ற பொழுது சிவனார் அருளால் இறந்த கன்று, அரசகுமரன், அமைச்சன் ஆகிய மூவரும் உயிர் பெற்றெழுதல் என்பன இக்குறிப்புகள் சேக்கிழார்க்கு எங்ஙனம் கிடைத்தன?

திருவாரூர்க் கல்வெட்டு. திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் திருக்கோவில் இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. அநபாயன் தந்தையான விக்கிரம சோழனது இந்த ஆட்சியாண்டில் (கி.பி.1123)இல் வெட்டப்பட்டது. அது திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே மநுச்சோழன் வரலாற்றைக் கூறுவது போல வெட்டப்பட்டுள்ளது.