பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 1.

உடையவராக விளங்கினார். (2) சைவசமய நூல்களில் சிறந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்தார் நாகரிகக் கலைகள் எனப்படும் வானக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, உடல்நூற்கலை, உளநூற்கலை, மருத்துவக்கலை முதலியவற்றிற் சிறந்து விளங்கினார். இப்பலவகைக் கலைப் புலமையையும் விளக்க வகைக்கொரு சான்று இங்குக் காட்டுவோம்.

(1) தமிழ் நூற் புலமை பெருங்காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைப் பாடிய ஆசிரியர் சேக்கிழார் பெருமான் தமக்குக் காலத்தால் முற்பட்ட புறநானூறு, அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற பழைய இலக்கியங்களை அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது காவியத்தால் நன்கு புலனாகிறது. அப்பெரியார் மேற்சொன்ன நூற் கருத்துக்களை எங்ங்னம் தமது நூலுள் எடுத்து ஆண்டுள்ளனர் என்பதைக் கீழே காண்க. புறநானூறு .சேக்கிழார் திருநகரச் சிறப்பில் 'அரசன் தன் நாட்டு உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன் (செ. 14) என்றும் புகழ்ச்சோழர் புராணத்தில் 'மன்னவன் தன் நாட்டு உயிர்கட்கு உயிர் (செ. 33)என்றும் கூறியிருத்தல்,

'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற புறநானூற்றுச் செய்யுள் (செ. 186) அடிகளோடு ஒத்துவரல் காணலாம்.