பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

15


கூடல் கிழான், புரசைகிழான், வெண்குளப்பாக்க கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் சிறந்தவை. இவற்றுள் முதல் மூன்றும் கூடலூர், புரிசை, குளப் பாக்கம் என்னும் ஊர்ப் பெயர்களை முதலாகக் கொண்டவை. 'சேக்கிழான்' என்பது அப்படியன்று. சே-காளை; சேக்கிழான்-காளைக்குரியவன் எனக் கொள்ளின், எருதுகளைக் கொண்டு வயல் வேலை செய்யும் வேளாளனைக் குறிக்கும்; காளையை வாகனமாகக் கொண்ட உரிமையாளன் எனப் பொருள் கொள்ளின், சிவபெருமானைக் குறிக்கும். இரண்டாம் - பொருளே சிறப்புடையதாகும். "சேக்கிழான் என்ற பெயர் கொண்டு தொண்டை நாட்டில் முதல் முதற் குடியேறிய வேளாளன் மரபில் வந்தவர் 'சேக்கிழான் குடியினா' எனப்பட்டனர்; அக்குடியில் வந்த ஒவ்வொருவரும். 'சேக்கிழான்' என்ற குடிப் பெயரை முன்னும், தம் இயற்பெயரைப் பின்னும் பெற்றுச் சேக்கிழான் இராமதேவன்', 'சேக்கிழான்பாலறாவாயன்' என்றாற் போலப் பெயர்பெற்று விளங்கினர்" என்பது சோழர் காலக் கல்வெட்டுகளால் தெரிகின்றது. இச் சேக்கிழார் குடியினர் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுட் பலவற்றிற் குடியேறி வாழ்ந்தனர் என்பது.

1. மணவிற் கோட்டத்து மேலப்பழுவூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் அரையன். சங்கர நாராயணன்......

2. மேலூர்க் கோட்டத்துக் காவனூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்திமலையன்....

3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்.... என வரும்


' 585 of 1920 -- ' 183 of 1931 ' ' 208 of 1930