பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்25

வந்த பெரிய புராண ஆசிரியர் அநபாயனிடம் முதல் அமைச்சராக அமர்ந்தார். அரசனும் அமைச்சரும் பழுத்த சைவப் பெருமக்களாக விளங்கியதால், சோழப் பெருநாடே சைவ சமய வுணர்ச்சியில் வீறு பெற்றிருந்தது என்னல் மிகையாகாது.

சோழநாட்டுத் திருநாகேச்சரம். ‘சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது சோழநாட்டுத் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெருமானிடம் கரைகடந்த பக்தி கொண்டிருந்தார். அத்தகைய கோவில் ஒன்றைத் தமது குன்றத்துரில் எடுப்பித்தல் வேண்டும் என்று எண்ணங்கொண்டார்: அவ்வாறே புதிய கோவிலை எடுப்பித்தார். அதற்குத் திருநாகேச்சரம் எனப் பெயரிட்டார்’ என்பது சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்று.

சோழநாட்டுச் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயர் அஃதுள்ள இடத்திற்கே பெயராகிவிட்டாற் போலவே, குன்றத்துணர்த் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயரும் அஃதுள்ள இடத்தையே குறிக்கத் தொடங்கி இன்றளவும் வழக்காறு பெற்றுவிட்டது. சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் சேக்கிழார், அவர் தாயார், தம்பி பாலறாவாயர் இவர்தம் உருவச்சிலைகள் இன்றளவும் இருந்துவருகின்றன. சேக்கிழார் குடும்பத்தினர் அக்கோவிற் பெருமானிடம் அன்பு செலுத்தினவராவர் என்பதற்கு அவ்வுருவச்சிலைகளே சான்றாகுமன்றே?

குன்றத்தூர்த் திருநாகேச்சரம். இது முன்னதைப் போலப் பெரிய அளவில் அமைந்ததில்லை. ஆயினும், அழகும் அமைதியும் கெழுமிய இடத்தில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்திய கோவில் என்பதைப் பல சான்றுகள் கொண்டு உணரலாம். வெளிச் சுற்றில் சேக்கிழாருக்குச்