பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 சேக்கிழார்

சிறிய கோவில் இருக்கின்றது. ஆண்டு தோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் சேக்கிழார் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்தாம் நாள் சேக்கிழார் திருவுருவம் மிக்க சிறப்பாக அணி செய்யப்பட்டு ஊர்வலம் வருதல் காணத்தக்க ஒரு காட்சியாகும்.

கல்வெட்டுகள். அக்கோவிற் கல்வெட்டுகள் 4 ஆகும்[1] அவை யாவும் இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் என்ற திரிபுவன வீரதேவன் காலத்துக் கல்வெட்டுகளும் விசயநகர ஆட்சிக் காலத்து கல்வெட்டுகளுமாக இருக்கின்றன. அக்கோவிலில் திருவுண்ணாழிகைச் சபையார் இருந்தனர். கோவிற் பூசைகள் நாள்தோறும் குறைவின்றி நடந்து வந்தன. கோவிலை அடுத்த மடம் ஒன்று இருந்தது. அதனில் ஆலாலசுந்தரர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார், நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், சித்திரமேழி ஈங்கை, தேவப்பிள்ளை என்ற திருவுண்ணாழிகை நங்கை, உய்யவந்தாள் என்ற திருவுண்ணாழிகை நங்கை முதலிய தேவரடியார் பலர் இருந்தனர். கோவிலுக்குக் சேக்கிழார் மரபினரும் பிறரும் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.

பெரிய புராணத்திற்கு அடிப்படை. இங்ஙனம் சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சர் வேலை பார்த்துக்கொண்டே சிவபக்தியிற் சிறந்த செம்மலாய் விளங்கிவந்தார். அவர் முதல் அமைச்சராதலின், சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டிய கடமை உடையவர். சிறந்த புலவரும் சிவபக்தரும் அரசியல் அறிஞரும் ஆகிய அவர் தமது தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை மிக்க பயனுடையதாகச் செய்திருப்பார் அல்லரோ? அவர் காலத்தில் சைவ சமயம் நன்றாக


  1. Ins 187, 231 of 1929 - 30