பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 சேக்கிழார்

உத்தமசோழபுரம் முதலிய பகுதிகளிற் சிவன் கோவில்களை எடுப்பித்தான். சோழ மன்னரைப் பின்பற்றி அவர்தம் பேரரசில் இருந்த சிற்றரசரும் பிரபுக்களும் எடுப்பித்த புதிய கோவில்கள் பலவாகும். இவை அல்லாமல், பாடல் பெறாதனவும் சோழர் காலத்தில் புதியனவாகக் கட்டப் பெறாதனவுமாக இருந்து சோழர் ஆட்சியில் புதுப்பிக்கப்பெற்ற கோவில்கள் பலவாகும்.

பாடல் பெற்ற கோவில்கள்: பாடல் பெற்ற கோவில்கள் பல,முழுவதும் கற்கட்டடங்களாக மாற்றப்பட்டன; வேறு சில கோவில்களில் விமானம் மட்டும் கற்கட்டடங்களாக மாற்றப்பட்டது.சிலவற்றில் கோபுரம், திருச்சுற்று (பிராகாரம்) என்பவை புதுப்பிக்கப்பட்டன. இராசராசன் பாட்டியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணி ஆவர். அவரது பொருள் உதவியால் திருத்துருத்தி (தஞ்சை ஜில்லா குற்றாலம்). திருக்கோடிகா, திருவாரூர் அரநெறி, திருவக்கரை, திருமுதுகுன்றம் முதலிய கோவில்கள் கற்றளிகள் ஆயின. திருவையாறு, திருவெண்காடு முதலிய முப்பதுக்கு மேற்பட்ட தலங்களில் உள்ள கோவில்கள் பொன்தானம், நிலதானம், பொன், வெள்ளிப் பாத்திரங்கள் முதலியவற்றைப் பெற்றனவாகும். பாடல்பெற்ற கோவில்கள் பலவற்றில் சித்திரை, வைகாசி, ஆணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்பது பல கோவில் கல்வெட்டுகளாற் புலனாகிறது. இவ்விழாக்கள் புதியனவாகச் சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்டவை என்பது அக்கல்வெட்டுகளிற் காணப்படாமையால், இவை. அனைத்தும் நீண்ட காலமாகவே வழக்கில் இருந்தவை என்று கொள்ளத் தடை இல்லை.