பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

69


முற்பட்டது. பின்னது சோழர் காலத்தது. சம்பந்தர் மதுரையில் இருந்த சமணருடன் வாதிட்ட விவரத்தைச் சேக்கிழார் தமது நூலில் விரிவாகக் கூறியிருத்தலையும், பிற புராணங்களில் ஆங்காங்குச் சமணர் பழக்க வழக்கங்களைச் சுட்டியிருத்தலையும் நோக்க, அவர் தம் காலம் வரை நாட்டில் இருந்த சமண நூல்களைச் செவ்வையாகப் படித்தவர் என்பதை எளிதில் உணரலாம். இதனுடன், அவர் தம் காலச் சமணப் பெரு மக்களுடன் அளவளாவி, அவர்களுடைய கொள்கைகளையும் பிறவற்றையும் நன்கு விசாரித்தறிந்தவராகவும் இருத்தல் கூடும் என்று நம்ப இடமுண்டு. சேக்கிழார் காலத்துச் சோழப் பெரு நாட்டில் சமணர் இருந்தனரா? எனின். ஆம் இருந்தனர். சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. சமண சமய நூல்கள் இருந்தன. அவை சமணர் கோவில்களில் படித்து விளக்கப்பட்டன. வெடால் சிற்றாமூர் ஆனந்த மங்கலம் விளாப்பாக்கம் திருப்பருத்திக்குன்றம் முதலிய இடங்களில் சமணர் கோவில்களும் மடங்களும் இருந்தன. அவற்றில் 'குரத்திமார்' என்றும் அடிகள் என்றும் கூறப்பெற்ற சமணப் பெண் துறவிகள் பலராக இருந்து சமயத் தொண்டு செய்து வந்தனர். சமணத் துறவிகள் 'ரிஷி சமுதாயம்' என்ற பெயரால் விளங்கினர். எனவே, சேக்கிழாரது சமண சமயப் புலமை, சமண நூல்களாலும் சமணப் பெருமக்களாலும், உண்டாகி இருத்தல் வேண்டும் எனக் கூறல் தவறாகாது.

3.வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. 
4.தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது.
5.செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
6.செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
7.செங்கற்பட்டு மாவட்டத்தில் உன்ளது.