பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 D சேக்கிழார்


பெளத்த் சமய நிலை. மணிமேகலை, வளையாபதி என்ற இரு நூல்களும் சேக்கிழார்க்கு முற்பட்ட பெளத்த நூல்கள். அவற்றில் பெளத்த சமயக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள. சேக்கிழார் காலத்தில் நாகப்பட்டினம் சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் பெளத்த சமயத்தவரான சீன வணிகர் குடியேறியிருக்கத் தக்கதாகவும் விளங்கியது. சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் கடல் வாணிகத்திற் கவின்பெற்று விளங்கிய நாகப் பட்டினம் சென்றிருத்தல் இயல்பே அங்கிருந்த பெளத்த வாணிகருடன் அளவளாவி அவர்தம் சமய நுட்பங்களை நேரிற் கேட்டறிந்திருந்தலும் இயல்பே. - - .

முடிவுரை. இதுவரை கூறப்பெற்ற பலவகை விவரங்களால், சேக்கிழார்,பெரிய புராணம் பாடுவதற்கு முன்பே இந்நாட்டில நாயன்மாரைப்பற்றிய வரலாறுகள் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் ஒரளவு பரவி இருந்தன என்பதும் அங்ங்ணம் அவை பரவக் காரணமாக இருந்தவை கோவில்கள், சிற்பங்கள், ஒவியங்கள், விழாக்கள், மடங்கள், புராணங்கள் முதலான சமய நூல்கள், சைவத் திருமுறைகள், பிறசமய நூல்கள் என்பதும் இவை அனைத்தையும் பயன்படுத்தியே சேக்கிழார் ஒப்புயர்வற்ற பெரிய புராணத்தைப் பாடியிருத்தல் வேண்டும் என்பதும் அறியக்கிடத்தல் காணலாம். இனி அடுத்த பிரிவில், நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கச் சேக்கிழார் மேற்கொண்ட பெரு முயற்சியைக் கண்டறிவோம்.