பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




6. பெரிய புராணம் பாடின வரலாறு


புராண வரலாறு. ‘சேக்கிழார் புராணம்’ என்ற 'திருத்தொண்டர் புராண வரலாறு' என்ற நூலிற் சேக்கிழார் பெரிய புராணம் பாட நேர்ந்த சந்தர்ப்பத்தைப்பற்றிக் கூறப்படும் செய்தி இதுவாகும்:

சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது, அரசன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியம் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். அரசன் இங்ஙனம் சமண காவியத்தில் ஈடுபாடு காட்டி மகிழ்வதைச் சேக்கிழார் கண்டு மனம் வருந்தினார். அவர் ஒருநாள் இளவரசனைத் தனியே கண்டு, “ஒழுக்க மற்ற அமணரது காவியம், நம் அரசரை ஒத்த சீவகன் என்பவனது வரலாறு கூறுவதாகும். அதனைப் படிப்பதனாலோ கேட்பதனாலோ அரசர் பெறத்தக்க நன்மை ஒன்றும் இல்லை. அதனை விடுத்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாயன்மார் வரலாறுகள் கொண்ட சிவகதை படிக்கக் கேட்பது மிகவும் நல்லது” என்று மொழிந்தனர்.

'இம்மொழியை இளவரசன் வாயிலாக உணர்ந்த சோழர் பெருமான் சேக்கிழாரை வரவழைத்து, “நீர் மொழிந்த சிவகதை நவகதையோ? புராணமோ? முன்னுால் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? சிவனடியாருள் இன்றும் உயிருடன் இருப்பவர் உளரோ?”. எனப் பலவாறு, நாயன்மார் களைச் சிறிதளவேனும் அறியாத - சோழர் மரபுக்கே முற்றும் புதிய ஒர் அரசன் கேட்பதுபோலக் கேள்விகள் கேட்டான். -