பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 77

அளித்தன. சுருங்கக் கூறின், அநபாயன் காலத்தில் நாடெங்கும் சைவமணம் நன்றாக வீசிக்கொண்டிருந்தது: நாயன்மார் வரலாறுகள், திருமுறைகள், பூசைகள். விழாக்கள், சிற்பங்கள். ஒவியங்கள் இவற்றின் வாயிலாக நன்கு பரவியிருந்தன. இத்தகைய பொற்காலத்தில் - சைவ நன்மரபில் பிறந்து வளர்ந்த அநபாயன், நாயன்மார் வரலாறுகளை அறியாத முழுமூடனாக இருந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியிருத்தல் உண்மைக்கு மாறாகும். இஃது அவ்வாசிரியரது அறியாமையை அறிவிப்பதே அன்றி வேறன்று. சேக்கிழார் பெரிய புராணம் பாடியதற்குக் காரணம் கூறவேண்டும் என்பதற்காக ஆசிரியரே கட்டிச் சொன்ன காரணமாக இது காணப்படுகிறதே தவிர, இக்கூற்றிற் கடுகளவும் உண்மை இருப்பதாக அறிவும் ஆராய்ச்சியும் உடைய பெருமக்கள் கொள்ளார்.

சேக்கிழார் புராண ஆசிரியர் யாவர்?'இங்ஙனம் பொறுப்பற்ற முறையில் புராணம் பாடிய இந்நூலாசிரியர் யாவர்? என்பது நாம் அறியவேண்டும் ஒன்றாகும். (1) திருமுறைகண்ட புராணம், (2) சேக்கிழார் புராணம், (3) திருத்தொண்டர் புராணசாரம், (4) திருப்பதிகக் கோவை, (5) திருப்பதிக் கோவை என்ற ஐந்து நூல்களையும் பாடியவர் உமாபதி சிவாசாரியார் என்பவர் என்பது நாட்பட்ட கொள்கையாகும். இக்கூற்று சில ஏடுகளில் உள்ளது. சில ஏடுகளில் இல்லை. உமாபதி சிவாசாரியார் என்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த "கொற்றவன் குடி என்னும் நகரப் பிரிவில் வாழ்ந்தவர் சிறந்த சிவபக்தர். இத்தகைய பெரும் புகழ்பெற்ற சைவப் புலவர் ஒருவர் இந்த ஐந்து நூல்கட்கும் ஆசிரியர் என்பது கூறப்படுகிறது. இதன் உண்மையை இங்கு ஆராய்வோம்.