பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 79

காலத்தவரும் நம்பி காலத்தவருமான கபிலதேவர், பட்டினத்தார் போன்ற அடியார் பாக்களைப் பதினோராந் திருமுறையாகவும் நம்பி தொகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. நம்பிக்குப் பிற்பட்டவர் பாக்களை நம்பியே தொகுக்க முடியுமா? காலத்தால் முற்பட்ட அடியார்கள் பாக்களைப் பின்வைக்க இயலுமா? அங்ஙனம் வைப்பதில் ஒருவகைப் பொருத்தமேனும் இருக்கவேண்டும் அல்லவா? இவ் விவரங்களை வரலாற்று முறையிலும் ஆராய்ச்சி முறையிலும் இருந்து கவனிப்பின், 'நம்பி முதல் ஏழு திருமுறைகளையே தொகுத்தனர். பிற்பட்ட திருமுறைகளை அவை கிடைக்கக் கிடைக்கப்பின் வந்த அறிஞர் முறைப்படுத்தினர். என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.

சேக்கிழார் புராண ஆசிரியர் வேறு; உமாபதி சிவம் வேறு. இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராயின். தவறான கருத்துகள் பலவற்றைக் கூறும் சேக்கிழார் புராணமும் திருமுறைகண்ட புராணமும் பாடியவர் - பொறுப்புள்ள சைவப் பெரும் புலவராகிய உமாபதிசிவம் ஆகார் ஏனைய மூன்றையும் பாடியவர் உமாபதி சிவம் எனக்கொள்ளலாம் என்ற முடிபே ஏற்புடையதாகும். எனவே, முன்னூல்கள் இரண்டையும் பாடியவர் பெயர் தெரியாத புலவர் ஒருவராவர். அவர் நூல்களை உமாபதிசிவம் பாடினார் எனக் கூறுவதால், புகழ்பெற்ற அச்சைவ சமயப் புலவர்க்குச் சிறுமை உண்டாகுமே தவிரப் பெருமை ஒருபோதும் உண்டாகாது.

இதனைப்பற்றிய விரிவான ஆராய்ச்சியை எனது புராண ஆராய்ச்சி என்ற பெருநூலிற் கண்டுகொள்க.