பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

85

சம்பந்தர் யாத்திரை. அப்பர், சம்பந்தா.சுந்தரருடைய தல யாத்திரைகளைக் குறிக்கும் இடங்களில், ‘இவர் இன்ன வூரில் உள்ள கோவிலைப் பணிந்த பிறகு இன்ன வழியே சென்று இன்னவூர்க் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்: பிறகு இன்ன இன்ன கோவில்களைத் தரிசித்து இன்ன பதியை அடைந்தார்’ என்று சேக்கிழார் கூறியுள்ளார். அந்தந்த யாத்திரையில் கூறப்படும் தல முறைவைப்பு ஊன்றி நோக்கத்தக்கது.அஃது இன்றளவும் ஒத்திருத்தலைக் காணக் காண, அவ்விடங்களை எல்லாம் காணச்சேக்கிழார் மேற்கொண்ட உழைப்பை எண்ணி எண்ணி நாம் மகிழவேண்டுபவராகிறோம். சான்றாகச் சில குறிப்புகளைக் காண்க.

1.தலையாலங்காடு என்பது திருவாரூர்க்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கும் சிவத்தலமாகும். அங்கிருந்து திருவாரூர்க்கு வரும் பெருவழியில் பெருவேளூர், சாத்தங்குடி, கரவீரம், விளமர் என்ற தலங்கள் இருக்கின்றன. சம்பந்தர் தமது யாத்திரையில் இத்தலங்களை முறையே சென்று தரிசித்துத் திருவாரூரை அடைந்தார் என்று சேக்கிழார் செப்பியிருத்தல் உண்மைக்கு எத்துணைப் பொருத்தமாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

2.சம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து மதுரை சென்ற வழியைக் கூறுதல் கவனிக்கத் தக்கது. அவர் திருமறைக்காட்டிலிருந்து தெற்கு நோக்கிச்சென்று அகத்தியன் பள்ளி, கோடிக்கரை இவற்றைத் தரிசித்து மேற்கு நோக்கிச் சென்று இடும்பாவனம் முதலிய தலங்களைப் பணிந்து முல்லையும் நெய்தலும் கூடிய வழியே சென்று பிரான்மலை முதலியவற்றைப் பாடி, மதுரை அடைந்தார் என்பது - தஞ்சை இராமநாதபுரம், மதுரை மாவட்டப் படங்களைக் கொண்டு கவனித்து இன்புறத் தக்கது.