பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சேதுபதி மன்னர் வரலாறு

பற்றிய விவரங்களைத் தருகின்ற ஆவணங்கள் பல கிடைத்தில. என்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள், பதிவேடுகள், சென்னை தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடுகள், ஒலை முறிகள், கல்வெட்டுக்கள் ஆகியவைகளில் இருந்து தொகுக்கப்பட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கண்டுள்ள அறக்கொடைகளைத் தவிர இன்னும் ஏராளமான அறக்கொடைகள் பற்றிய விவரங்களைக் காட்டுகின்ற ஆவணங்கள் பல இருந்து அழிந்து இருக்க வேண்டும். இந்த மன்னர்கள் சேது நாட்டு மக்களிடையே நல் உறவையும், தெய்வீகச் சிந்தனையையும் வளர்ப்பதில் தொண்டாற்றிய புலவர்கள், பண்டிதர்கள். அவதானிகள் மற்றும் மகா ஜனங்களுக்கும் இவர்கள் வழங்கிய சர்வமானியங்கள் - அகரப்பற்று. சதுர்வேதி மங்கலங்கள், ஜீவித காணிகள் ஆகியவைகள் பற்றிய அறக்கொடை விவரங்களுக்கான பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் சமண சமயத்தினரின் பள்ளிகளுக்கும் வழங்கிய பள்ளிச் சந்தம் என்ற வகை அறக்கொடை பற்றிய குறிப்புக்கள் கிடைத்த பொழுதிலும் அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறாதது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். குறிப்பாகச் சேதுபதிச் சீமையில் சமணர்களின் குடியிருப்புக்கள் அரியாண்குண்டு. மெய்யன் பள்ளி, அச்சன்பள்ளி, அறப்போது, முகிழ்த்தகம். நாகணி, நாகன்வயல், நாகமங்கலம், சாத்தன்பள்ளி, காட்டுச்சந்தை, அன்னவாசல், அரியன் ஏந்தல், அனுமந்தக்குடி, குணபதி மங்கலம், மச்சூர் ஆகிய கிராமங்களில் அமைந்திருந்ததை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களிலிருந்து திருக்கோயில்களுக்கு என தொகுக்கப்பட்டுள்ள சேது மன்னர்களது அறக்கொடைகள் நீங்கலாக சேது சமஸ்தானத்தின் பதிவேடு ஒன்றின் படி 11 கட்டளைகளும் இணைப்பு ‘அ’ சமஸ்தானத்தைச் சேர்ந்த 59. திருக்கோயில்களுக்கு கோயில்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள 311. அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘ஆ’ கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு இராமநாதபுரம் சமஸ்தானம் பதிவேட்டின் படி 28 அன்னசத்திரங்களுக்கு இந்த மன்னர்கள் வழங்கிய 61 அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘இ’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் அ ஆ இ களில் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கொடைகள் எந்தெந்த மன்னர்களால் எப்பொழுது வழங்கப்பட்டன என்பதற்கான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.