3
பதிப்புக்கு வேண்டிய உதவிபுரிந்த ஸ்ரீமாந் - S. Rm. M. Ct. பெத்தாச்சி செட்டியாரவர்கள் பெருந்தகைமை என்னால் ஒருபொழுதும் மறக்கத்தக்கதன்று. இச்சரித்திர நாயகனான சேரர்பெருமான் வீற்றிருந்தாட்சி புரிந்த வஞ்சிமா நகரின் பரிபாலனத்தலைமை பூண்டுள்ள இப்பிரபுவுக்கு, அவனது சரித்திரநூலை ஆதரிக்கும் உரிமையும் இயல்பிலுண்டன்றோ? இவர்கள், அறிவு திருவாற்றல்களுடன் நீடுவாழ்ந்து தமிழ் வளர்ச்சி புரிந்துவரும்படி திருவருள் பெருகுவதாக.
இச்சரித்திர நாயகனால் தெய்வமாக வணங்கப்பெற்ற பத்தினிதேவி (கண்ணகி)யின் செப்புத்திருமேனி யொன்று “லண்டன் - பிரிட்டிஷ்-மியூஸிய”த்தில் இருந்ததை டாக்டர். ஆநந்தகுமாரசுவாமியவர்கள் பிரதிசாயையெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்.[1] அப்பிரதிமை, இலங்கையினின்று 1830-ம் வருஷம் இங்கிலாந்துக்குக் கொண்டுபோகப்பட்டதாம். அப்பத்தினிதேவிபடிவத்துக்கு ஒரு பிரதியெடுத்து இந்நூலுட் சேர்த்திருக்கிறேன். இளங்கோவடிகள் கூறியபடி செங்குட்டுவன் காலத்தே இலங்கையிற் கயவாகுவால் பிரதிஷ்டிக்கப்பட்ட பத்தினியின் சரியான சாயலை இது காட்டுவது போலும்.
சிலப்பதிகார மணிமேகலைப்பதிப்புக்களில், ஐயரவர்களால் நன்கெழுதப்பட்டுள்ள கண்ணகி மணிமேகலைகளின்
- ↑ Selected Examples of Indian Art, Plate XXXIII, Pattini Devi.