பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8-ம் அதி :-
செங்குட்டுவன் சமகாலத்தரசர்.

செங்குட்டுவன் காலத்தே, தமிழ்ப் பெருவேந்தர்களாகிய சோழ பாண்டியரோடு அவர் கீழடங்கிய சிற்றரசர் பலரும் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பெருவேந்தருள்ளும் பலகிளையினர் தத்தம் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளைப் பிரித்தாண்டு வந்தனரென்பது முன்னூல்களால் உய்த்தறியப்படுகின்றது. சேரரில் தொண்டியையும் மாந்தையையும் தலைநகராகக்கொ ண்டு ஆட்சி புரிந்தவர்களை முன்னரே குறிப்பிட்டோம். இவ்வாறே சோழபாண்டியரிலுமிருந்தனரென்பது புறநானூறு முதலியவற்றை நோக்குமிடத்துப் புலப்படக் கூடியதே. ஒரு புலவர் ஒரே வேந்தர் வமிசத்திற் பலரைப் பாடும்படி நேர்ந்ததற்கு இதுவே காரணமாகும். இவ்வாறு கொள்ளாவிடத்து, பலவரசர் ஒரே வமிசத்தில் ஏககாலத்தில் இருந்தவராகக் காணப்பட்டுச் சரித்திரவொற்றுமை பெறுவதில் மயக்கங் கொள்ள நேரும். இங்ஙனம் மூவேந்தர் வமிசங்களும் தனித்தனிக் கிளைகளுடையனவாயினும், செங்குட்டுவன் காலத்துச் சோழ பாண்டியருள்ளே தலை சிறந்து நின்ற அரசர் சிலரை நாம் முன் நூல்களினின்று குறிப்பிடலாகும். அன்னோர்களை அடியில் வருமாறு காண்க :-

[சோழர்.]

செங்குட்டுவன் காலத்திற் சோணாடாண்ட அரசர்கள் பலராயினும், முக்கியமாக, உறையூர்ச் சோழரும் புகார்ச் சோழருமென இருபகுதியினராகக் கொள்ளலாம். “'மாட மதுரையும்