பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

7

துறைமுகமாகவும், சேரருடைய தலைநகரங்களுள் ஒன்றாகவும் இருந்ததென்றும், மேனாட்டு யவனரது மரக்கலங்கள் மிளகு முதலிய பண்டங்களை ஏற்றிச்செல்வதற்கு இதுவே அக்காலத்தில் ஏற்ற நகராயிருந்ததென்றும் தமிழ் நூல்களாலும் தாலமி முதலிய பழைய யவனாசிரியர் குறிப்புக்களாலுந் தெளிவாகின்றன.[1] ஆகவே சேரநாட்டையும், அதன் முக்கிய நகரமொன்றையும் வான்மீகி முனிவருங் குறிப்பிட்டமை காண்க. இனி, மற்றொரு புராதன இதிகாசமாகிய மஹாபாரதத்தும் சேரர் செய்திகளை நாம் காணலாம். பாரதப்போரில், பாண்டவர் பக்கத்தினின்று சேரர் துணைபுரிந்தவரெனப் பொதுவாக அவ்விதிகாசத்தால் அறியப்படினும், உதியஞ்சேரல் என்பான் அப்பெரும் போர் முடியுங்காறும் பாண்டவசேனைக்கு உணவளித்தவனென்று தமிழ் நூல்களிற் சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இதனைத் தலைச்சங்கப்புலவராகக் கருதப்படும் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர்.

“அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.” [2]

என அவ்வரசனை நேரிற் பாடுதலால் அறிக. இச்செய்தியையே இளங்கோவடிகள்—

“ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த—சேரன்”[3]

  1. அகநானூறு. 149. இதனை மரீசிபத்தனம் என்பர், வ மிகிரர் (பிரஹத்ஸம்ஹிதை)
  2. புறநானூறு. 2
  3. சிலப்பதிகார வாழ்த்துக் காதை. ஊசல்வரி.